பீகார் உட்பட வடமாநில இளைஞர்களை அவமதிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக தலைவர்கள், பிரதமர் மோடியின் திமுக குறித்த பேச்சை மடைமாற்றம் செய்து நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எப்போதெல்லாம் தனக்கும் தன் கட்சிக்கும் ஆபத்து வருகிறதோ அப்பொதெல்லாம் தமிழக மக்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
இந்தி பேசும் மாநிலங்கள் கோமூத்திர மாநிலங்கள்… வட இந்தியர்கள் பன்றி போல பெருகுகின்றனர். வட இந்திய கலாச்சாரம் அருவருப்பானது. இந்தி படித்தவர்கள் தான் பானிபூரி விற்பதோடு கழிவறைகளை கழுவிக் கொண்டிருக்கின்றனர். வட மாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வாயில் இருந்து உதிர்ந்த அவதூறுகள் தான் இவை.
இதற்கெல்லாம் மேலும் ஒரு படி சென்று, இந்தி பேசுவோரை தமிழகத்திற்குள் நுழைய விட மாட்டேன் எனப் பேசிய மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். வடமாநில மக்களை எவ்வளவு கீழ்த்தரமாகப் பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாகப் பேசிய திமுகவினர், தங்கள் கட்சிமீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகக் கூறி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பீகாரில் உள்ள சக்கரா பகுதியில் மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்த பிரதமர் மோடி, வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு இண்டி கூட்டணி இழைத்துக் கொண்டிருக்கும் துரோகத்தைப் பட்டியலிட்டு பேசினார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் வெளிப்படையாகவே பீகார் மக்களை உள்ளே விடமாட்டேன் என பேசியபோது அருகில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டிய மோடி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் பீகார் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துயரங்களையும் வேதனையுடன் பகிர்ந்தார்.
தமிழகத்தில் பணியாற்றி வரும் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குறித்து திமுக தலைவர்கள் பேசும் விதமும், நடத்தும் விதமும் பிரதமர் மோடியின் பேச்சின் மூலம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதோடு, தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பீகார் மக்களை துன்புறுத்திக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக எனும் ஒரு அரசியல்கட்சிமீதானன குற்றச்சாட்டை, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பிரதமர்அவமதித்துவிட்டதாகத் திசைதிருப்பும் வேலையில் திமுகவும் அதன் தலைவர்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தனக்கும், தன் கட்சிக்கும் எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ? அப்போதெல்லாம் திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றித் தப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிராகவும் மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் திமுக தலைவர்கள் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் கேள்விக்குறியாகியுள்ள சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, அனைத்து பகுதிகளிலும் தாரளமாகப் புழங்கும் போதைப் பொருட்கள், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமை, பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு போராட்டமும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அண்மைக்காலமாகவே அரசுப்பணி நியமனம் தொடங்கி நெல் கொள்முதல் வரை எழுந்திருக்கும் பலநூறு கோடி ரூபாய் ஊழலை மறைக்கவே பிரதமர் மோடியின் பேச்சை திரித்துப் பரப்பி, அரசு நிர்வாகத் தோல்வியை மடைமாற்றம் செய்யும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
			 
                    















