ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி தற்போது சமையல் உலகிலும் அதே வேகத்தில் பாயத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் சைவ ரெடிமேட் குழம்பு வகைகளைச் சந்தையில் அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் பெற்ற மாபெரும் வெற்றிகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
1909-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன், தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களின் நம்பிக்கைக்குரிய வாகன பிராண்டாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மாருதி சுசுகி என்ற பெயரில் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக இயங்கும் இந்த நிறுவனம், புதுமை, தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை தனது அடையாளமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், வாகனத் துறையைத் தாண்டித் தற்போது சமையல் உலகிலும் தனது புதுமையைக் காட்டி அனைவரையும் சுசுகி நிறுவனம் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹமமாட்சு நகரில் உள்ள சுசுகி நிறுவனத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட இந்திய பொறியாளர்கள் உணவில் தங்கள் வீட்டுச்சுவையை அறியமுடியாமல் தவித்தனர். இதனை அறிந்த அந்நிறுவனம் அவர்களுக்காக இந்திய சைவ குழம்பு வகைகளை தங்கள் உணவகத்தில் சேர்க்க முடிவு செய்தனர்.
அதற்காகச் சுசுகி நிறுவனம் 150 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ‘டோரிசென்’ என்ற ஜப்பானிய உணவகத்துடன் கூட்டணி அமைத்தது. பல்வேறு இந்திய சைவ குழம்பு வகைகளை உருவாக்கிய இந்தக் கூட்டணி, பல மாத உணவு பரிசோதனைகளையும் நடத்தியது.
இந்தியாவின் கலாச்சார உணவு சுவையையும், ஜப்பானிய சமையல் நுணுக்கங்களையும் இணைக்கும் வகையில் சுவை சமநிலையை ஏற்படுத்த இந்த முயற்சி வழிவகுத்தது. இந்த எதிர்பாராத வெற்றியைக் கவனித்த சுசுகி நிறுவனம் அவற்றை வணிக ரீதியாக மாற்ற முடிவு செய்தது. தொடர்ந்து டோரிசென் நிறுவனத்துடன் தங்கள் ஒப்பந்தத்தை விரிவுபடுத்திய சுசுகி நிறுவனம், சில நிமிடங்களில் வெந்நீரில் சூடாக்கி சாப்பிடும் வகையில் குழம்பு வகை பாக்கெட்டுகளை தயாரித்தது.
கடந்த ஜூலை மாதம் அவற்றை “SUZUKI CAFETERIA INDIAN VEGETARIAN CURRY” என்ற பெயரில் சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முள்ளங்கி சாம்பார், தக்காளி-பருப்பு குழம்பு, சன்னா மசாலா மற்றும் பச்சை மூங்தால் குழம்பு என மொத்தம் 4 வகைகளில் இந்த ரெடிமேட் குழம்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பாக்கெட்டும் 918 யென் அதாவது, இந்திய மதிப்பில் 500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறந்த தரம் மற்றும் அதீத சுவை காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில், ஜப்பானிய குடும்பங்களின் அன்றாட உணவுப் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு அந்த ரெடிமேட் குழம்பு வகை பாக்கெட்டுகள் பிரபலமடைந்தது.
அதன் விளைவாக வெறும் 3 மாதங்களில் ஒன்றரை லட்சம் பாக்கெட்டுகள் விற்பனையாகி சுசுகி நிறுவனத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்று தந்துள்ளது. கார் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தத் தயாரிப்பின் பாக்கெட்டுகள், அந்த நிறுவனத்தின் ஆணி வேரை நினைவுபடுத்துவதுடன், உலகளாவிய உணவு வகைகளின் சுவைகளை இணைக்கும் புதிய பாதையையும் திறந்து வைத்துள்ளது.
இந்தியாவின் உணவுக் கலாச்சாரம் தற்போது ஜப்பானியர்களின் மனதையும் வயிற்றையும் வென்றுள்ளதை சுசுகி நிறுவனத்தின் இந்த வெற்றி எடுத்துரைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 14 புதிய சுவைகளில் ரெடிமேட் குழம்பு வகைகளை அறிமுகப்படுத்தச் சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுத்த முயற்சி, அந்நிறுவனத்திற்கு பெற்றுத் தந்த வெற்றியை இன்று உலக மக்களும் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.
 
			 
                    















