திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் வேலை தேடி வரும் பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளை திமுக-வினர் அவமதிப்பதையும், வன்மத்துடன் தகாத வார்த்தைகளால் அவதூறு பரப்புவதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.
உண்மை வெளிப்பட்டு விட்டதே என்ற ஆத்திரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிராக பாஜ பேசுவதாக சரடு விடுகிறார். திமுகவை பார்த்து பாஜ கேள்வி எழுப்பினால் அது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாகும்? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பீகார் உட்பட வட மாநில மக்கள் மீது வன்மத்தை கக்கி, தாக்குதலுக்குத் தூண்டி, மன மகிழ்ச்சி கொள்ளும் வக்கிர மனம் கொண்டவர்கள் திமுகவினர் தானே? 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இந்த வெறுப்பு பிரசாரம் உச்சத்திற்கு சென்றுள்ளதே! வட மாநில மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்ய மிக மோசமாக ‘வடக்கன்’ என்ற வார்த்தையை உருவாக்கி சமூக வலைளதங்களில் பரவிடச் செய்வது திமுகவினர் தானே?
தன் மீதான கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என விஷமப்பிரசாரம் செய்ய வேண்டாம். தமிழகத்தில் நல்லிணக்கம் ஏற்பட உழைக்காவிட்டாலும், வெறுப்பை விதைப்பதை நிறுத்தினால் நன்று.
காங்கிரஸ் கட்சியும் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். பீகார் மக்கள் மீது வன்மத்தை கக்கும் திமுகவினரை காங்கிரஸ் என்றாவது ஒருநாள் கண்டித்தது உண்டா? ஆளுக்கொரு வேஷம், நேரத்திற்கு ஒரு பேச்சு என பச்சோந்தியாகவே மாறி விட்ட காங்கிரஸ் கட்சி இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது
திமுக- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பீகார் மட்டுமின்றி தமிழக மக்களும் தகுந்த பாடம் புகட்டும் நாள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
			 
                    















