33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையைத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய அணு ஆயுதப் போட்டியைத் தூண்டியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா மற்றும் சீனா அணு ஆயுத தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடைசியாக 1992ம் ஆண்டு நெவாடாவில் நிலத்தடி அணு ஆயுதச் சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. இது அமெரிக்காவின் 1,054-வது அணு ஆயுதச் சோதனையாகும். சீனா கடைசியாக 1996-ல் அணுகுண்டு சோதனை நடத்தியது. கடைசியாக ரஷ்யா 1990ம் ஆண்டு அணுகுண்டு சோதனை செய்தது. உலகில் ஒன்பது நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அறியப்படுகின்றன.
இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அனைத்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக அணு ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன என்றாலும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. வடகொரியா 1985 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் 2003ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது.
தொடர்ந்து 2006ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இஸ்ரேல், ஒரு போதும் அணு ஆயுதங்கள் இருப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தின் தர அளவில் கிட்டத்தட்ட 99 சதவீதம் செறிவூட்டி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒன்பது நாடுகளில் சுமார் 13,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் 9,600 க்கும் மேற்பட்டவை செயலில் உள்ள ராணுவ இருப்புக்களில் உள்ளன என்று அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. பனிப்போரின் போது அணுசக்தி நாடுகள் வைத்திருந்த 70,000 அணு ஆயுதங்களிலிருந்து இது குறிப்பிடத் தக்க சரிவு என்றாலும், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, ரஷ்யாவிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5,500 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா 5,044 அணு ஆயுதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்த இரண்டு நாடுகளிடம் மட்டுமே உள்ளன. சீனாவிடம் 600 அணு ஆயுதங்களும், பிரான்சிடம் 290 அணு ஆயுதங்களும், பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்களும், இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும், இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்களும், வட கொரியாவிடம் 50 அணு ஆயுதங்களும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2030க்குள் மேலும் 1,000 அணு ஆயுதங்களை அதிகரிக்க இந்நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. உண்மையிலேயே உலகின் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் அணுகுண்டு அல்ல. ஹைட்ரஜன் வெடிகுண்டுதான். ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டின் ஆற்றல் அணுகுண்டை விட 1000 மடங்கு அதிகமாகும். H-குண்டுகள்-எனப்படும் ஹைட்ரஜன் வெடிகுண்டுகள், மனிதர்கள் இதுவரை உருவாக்கிய மிகவும் அழிவுகரமான ஆயுதங்களில் ஒன்றாகும்.
1952-ல் அமெரிக்கா முதன்முதலில் ஹைட்ரஜன் வெடிகுண்டுச் சோதனை செய்தது. ஒரு வருடம் கழித்து, ரஷ்யாவும் ஹைட்ரஜன் வெடிகுண்டைத் தயாரித்தது. 1966-ல் சீனா தனது முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் அணுகுண்டு வெடிப்பிலிருந்து முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிப்புக்கு வேகமாகச் சென்ற ஐந்து அணு ஆயுத நாடுகளில் சீனாவும் இடம் பிடித்தது. 2016ம் ஆண்டு, வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அணுசக்தி அல்லாத ஹைட்ரஜன் வெடிகுண்டை சீனா சோதனை செய்து உலகையே ஆச்சரியப் பட வைத்தது.
இது தூய்மையான எரிசக்தி தீர்வுகளுக்கு இடமளிக்கும் வகையில் நவீனப் போர் தொழில்நுட்பத்தில் முக்கியமான மாற்றமாகக் கருதப் படுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவும் அதிக அளவில் அணுஆயுதங்கள் மற்றும் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று பரவலாகக் கூறப்படுகிறது. அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த APJ அப்துல் கலாம் தலைமையில் ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனப்பகுதியி்ல் இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. மே 11 ஆம் தேதி மற்றும் மே 13 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் சக்தி 1, சக்தி 2, சக்தி 3, சக்தி 4, சக்தி 5 என மொத்தம் 5 அணு குண்டு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இதில் சக்தி 1 என்ற பெயரில் முதலில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையே ‘தெர்மோ நியூக்ளியர் பாம்’ எனப்படும் ஹைட்ரஜன் வெடி குண்டு சோதனை தான். இரண்டு கட்டங்களாக நடத்தஇந்தச் சோதனையில்தனையில் 43 முதல் 45 கிலோ டன் ஆற்றல் வெளிப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அடுத்ததாக நான்கு அணுகுண்டுகளையும் வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்தது.
இருந்தாலும், இந்தியா செய்தஅணுகுண்டு சோதனை தோல்வி அடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. குறிப்பாக இந்தியா ஹைட்ரஜன் வெடி குண்டு சோதனை செய்யவில்லை என்று கூறியது. அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவும் ஹைட்ரஜன் குண்டுகளை மீண்டும் சோதனை செய்யும் என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.
 
			 
                    















