மும்பையில் 17 குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களைப் பணயக்கைதிகளாக வைத்திருந்த ரோஹித் ஆர்யா சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். யார் இந்த ரோஹித் ஆர்யா? எதற்காகக் குழந்தைகளைக் கடத்தினார்? மீட்பு நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதுபற்றிப் பார்க்கலாம்.
நான்கு நாட்களுக்கு முன்பு, ஒரு இணையத் தொடருக்கான நடிகர்கள்தேர்வுக்காகச் சுமார் 100 மாணவர்கள் மும்பை POWAIல் உள்ள ஆர்.கே ஸ்டுடியோவுக்கு அழைக்கப்பட்டனர். போலி ஆடிஷன் நடத்தி விட்டுபெரும்பாலானவர்களைத் திருப்பி அனுப்பி விட்டு,17 குழந்தைகளையும் இரண்டு பெரியவர்களையும் மட்டும் ஸ்டுடியோவுக்குள்ளேயே தங்க வைக்கப்பட்டனர்.
சிலரை தரை தளத்திலும் மற்றவர்களை முதல் தளத்திலும் சிறைபிடித்து வைக்கப்பட்டனர். அன்று பிற்பகல் 1 மணியளவில், மதிய உணவுக்குக்கூடக் குழந்தைகள் யாரும் வெளியே வராததால், வெளியே காத்திருந்த பெற்றோர்கள் பதற்றமடைந்தனர்.அருகில் உள்ள கட்டிடத்தில் வசிப்பவர்கள், கண்ணாடி ஜன்னல்கள் வழியாகச் சில குழந்தைகள் அழுது உதவிகேட்டு சைகை காட்டுவதைக் கவனித்து, காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
மதியம் 1.45 மணிக்கு அதிரடிப்படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டவர்களுடன் காவல்துறையினர் சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்தனர். இதற்கிடையே பிற்பகல் 2.15 மணிக்குப் பணயக்கைதிகளைப் பிடித்த வைத்த நாக்பூரைச் சேர்ந்த யூடியூபரும் பள்ளி ஆசிரியருமான ரோஹித் ஆர்யா, அதன் பிறகு ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், தான் ஒரு பயங்கரவாதி இல்லை என்றும் சிலருடன் பேச விரும்புவதாகவும், தனக்கு பணம் தேவை இல்லை என்றும் கூறினார். பிற்பகல் 2.45 மணிக்குத் தன்னை பேச அனுமதிக்காவிட்டால் ஸ்டுடியோவுக்குத் தீ வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் ரோஹித் ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது. பிற்பகல் 3.15 மணிக்கு, காவல் துறையினர் குளியலறை வழியாகக் காவல் துறையினர் கட்டிடத்துக்குள்ளே சென்றனர்.
பிற்பகல் 4.30 சரணடைய காவல் துறையினர் கொடுத்த இறுதி வாய்ப்பை மறுத்த ரோஹித் ஆர்யா, குழந்தைகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி காவல்துறையினர் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கியதும், பதிலுக்குத் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதில், ரோஹித் சர்மா பின்னர் கொல்லப்பட்டார். பிற்பகல் 4.45 மணிக்குக் குழந்தைகள் உட்பட பணயக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட 15 நாட்களுக்குத் தீவிரத் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு தன்னார்வ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அப்படியான ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவர்தான் சுட்டுக் கொல்லப்பட்ட ரோஹித் ஆர்யா. “மாஜி ஷாலா, சுந்தர் ஷாலா” என்ற பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசுடன் ஆர்யாவுக்கு இருந்து வந்த நீண்டகால பிரச்சனை காரணமாகவே இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஆர்யாஈடுபட்டதாகப் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
2023ம் ஆண்டு, மகாராஷ்டிராவில் Swachhta Monitor திட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஆர்யா, அந்தத் திட்டத்துக்கானன பணம் தனக்கு வழங்கப் படவில்லை என்ற காரணத்தால், இதுகுறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் சிவசேனா தலைவருமான தீபக் கேசர்கருடன் பேச விரும்பியுள்ளதாகத் தெரிகிறது.
இதே பிரச்சனை தொடர்பாக, ஏற்கனவே முன்னாள் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கரின் வீடு அருகே உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ரோஹித் ஆர்யா ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ஆர்யாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள மகாராஷ்டிரா அரசு, 9 லட்சம் ரூபாய் மானியத்துடன் 2021 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே ஆர்யாவின் ஸ்வச்ச்தா மானிட்டர் அங்கீகரிக்கப்பட்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் 2023–24 ஆம் ஆண்டில், Swachhta Monitor இரண்டாம் கட்டத்தை நடத்துவதற்கு, 2 கோடி ரூபாய் மதிப்பிலான அனுமதி வழங்கியும், ஆர்யாவின் திட்ட அறிக்கை மற்றும் செலவு விவரங்கள் தெளிவற்றதாகவும், முறையற்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆர்யாவின் நிறுவனத்துக்கு Swachhta Monitor 2.0 மற்றும் 2024–25க்கான திட்டம் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் மாநில அரசு விளக்கமளித்துள்ளது.
 
			 
                    















