ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றி வருவதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி டெல்லியில் ‘ஜனநாயகம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ‘ஜனநாயகம்’ என்பது மிகவும் பயனுள்ள ஆட்சிமுறை என நிரூபிக்கப்பட்டாலும், அதிலும் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
பிரிவினைவாத அரசியலுக்கு அது வழிவகுப்பதாகக் கூறிய அவர், பல பிரிவுகளை ‘ஜனநாயகம்’ உள்ளடக்கி வைத்திருப்பதாகக் கூறினார்.
100 பேரில் வெறும் 25 பேர் தன்னை ஆதரிப்பவர்களாக இருந்தாலும், மீதமுள்ளவர்களை பிளவுபடுத்துவதன் மூலம் தான் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று விவரித்த அஜித் தோவல், இந்தப் பிளவு மிகவும் அபாயகரமானது எனவும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுவதாகவும், லட்சியவாதம், தொலைநோக்கு சிந்தனை, தேசபக்தியென எல்லாவற்றிலும் பணம் முக்கியத்துவம் பெறுவதாகவும் தெரிவித்தார்.
 
			 
                    















