ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐநாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். தங்களின் ஆக்கிரமிப்பு பகுதியில் கடும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தரும் விதமாக, இந்தியாவுக்கான ஐநா தூதரகத்தின் முதல் செயலாளர் பவிகா மங்களானந்தன் உரையாற்றினார்.
அப்போது பேசிய பவிகா மங்களானந்தன், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, மிருகத்தனம் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களின் மீது கட்டவிழ்க்கப்படும் மனித உரிமை மீறல்களைப் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பாகிஸ்தானின் இரட்டைப் பேச்சும், பாசாங்குத்தனமும் மதிப்புமிக்க ஐநா சபை மன்றத்தின் நேரத்திற்கும், கவனத்திற்கும் தகுதியானவை அல்ல எனவும் பவிகா மங்களானந்தன் சாடினார்.
















