புதுச்சேரியின் விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாடு சுதந்திரமடைந்த பிறகும் பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரிக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் 1954ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி விடுதலை கிடைத்தது. ஆண்டுதோறும் புதுச்சேரியின் விடுதலை நாள், அரசு சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டு விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்துக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பல்வேறு வகையான கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விடுதலை நாள் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, கல்வியில் தேசிய செயல்திறன் தரக் குறியீட்டு வரிசையில் புதுச்சேரி ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும், மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவை வழங்குவதில் முன்னோடி மாநிலமாகப் புதுச்சேரி தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக பகுதியில் 217 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 185 ஏக்கர் நிலமும் தேவைப்படுவதாகவும், இதுதொடர்பாகத் தடையில்லா வரையறை ஆய்வை இந்திய விமான நிலைய ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
















