ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைகளில் கடந்த செப்டெம்பர் காலாண்டில், 102.5 பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், கடந்த 1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாச்னியக் மற்றும் ரொனால்டு வேய்ன் ஆகியோரால் நிறுவப்பட்டது. IPHONE, IPAD, MAC, APPLE WATCH, AIRPODS போன்ற புதுமையான தயாரிப்புகள் மற்றும் APP STORE, I CLOUD, APPLE MUSIC போன்ற சேவைகள் மூலம் ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை பெற்றுள்ளது.
தனது நுண்ணறிவு வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றால், ஆப்பிள் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சந்தை மதிப்புடைய நிறுவனமாகக் கருதப்படுகிறது. நடப்பாண்டு நிலவரப்படி, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தனது தனித்துவமான தயாரிப்பு தரத்தாலும், சேவைகளால் வழங்கிய நம்பகத்தன்மை ஆகியவற்றால், ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் நடப்பாண்டின் 4-வது காலாண்டில் மட்டும் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி, தனது விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவை தளமாகக்கொண்டு செயல்படும் சந்தைகளில் IPHONE விற்பனை பெருமளவு அதிகரித்ததன் காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு ஆப்பிள் நிறுவனம் வருவாயில் சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் நிதி அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அவர், ஆண்டு முழுவதும் சில்லறை விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், சமீபத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் சீனாவில் பல புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். உலகளாவிய IPHONE விற்பனையில் 49 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பரில் புதிய IPHONE 17, IPHONE 17 PRO, PRO MAX மற்றும் IPHONE AIR ஆகிய தயாரிப்புகள் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறிய டிம் குக், புதிய AIRPODS PRO 3, APPLE WATCH வரிசை மற்றும் சக்திவாய்ந்த M5 சிப் கொண்ட புதிய MACBOOK PRO, IPAD PRO ஆகியவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகக் கூறினார்.
இந்நிலையில் தங்கள் நிறுவனத்தின் இந்தச் சாதனை வளர்ச்சியைப் பெருமையுடன் உலக மேடையில் அறிவிக்க விரும்புவதாகவும் டிம் குக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்கிடையே, IPHONE 16 மாடல்களின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டதாக ஆப்பிள் நிறுவனத்தின் நிதி அலுவலர் கேவன் பரேக் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் இதுவரையில்லாத வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் உருவெடுக்கும் புதிய சந்தைகளில், ஆப்பிள் நிறுவனம் சாதனை விற்பனையை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவில் அடைந்த விற்பனை வளர்ச்சி கடந்த ஆண்டைவிட 8 சதவீதம் உயர்வு எனத் தெரிவித்த அவர், ஒரு பங்கின் வருமானம் 1.85 டாலராக உயர்ந்து 13 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கேவன் பரேக் விவரித்தார்.
அத்துடன் இந்தப் புதிய சாதனைமூலம் ஆப்பிள் நிறுவனத்தின் நடப்பாண்டு வருவாய் 416 பில்லியன் டாலராக உயர்ந்து, இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், உலகளாவிய வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் திருப்தியால் ஆப்பிள் தயாரிப்புகளின் வளர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வெற்றியைப் பங்குதாரர்களும் கொண்டாடும் வகையில், வரும் 13-ம் தேதி ஒரு பங்குக்கு 0.26 டாலர் ரொக்க லாபம் வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அறிவித்துள்ளது.
















