ஒரு காலத்தில் இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்த வங்கதேசம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியை ஐக்கிய அரபு அமீரகம் வழியாகத் துபாயிலிருந்து வாங்குகிறது. அதிக விலை கொடுத்து இந்திய அரிசியை வங்கதேசம் வாங்க காரணம் என்ன? என்பது பற்றித் தற்போது பார்க்கலாம்.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம் ஆகும். சுமார் 140 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்தால் சர்வதேச சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பாலைவன நகரமான துபாய், அரிசியை உற்பத்தி செய்வதில்லை.
அரிசிக்கு முழுவதும் இறக்குமதியையே அந்நாடு நம்பியுள்ளது. இந்நிலையில், துபாயில் இருந்து அரிசி கொள்முதல் செய்வதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. அதுவும் இந்திய அரிசி என்று வங்கதேச உணவுத் துறை கூறியுள்ளது. வங்கதேசத்துக்கு அரிசி விநியோகிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் துபாயில் உள்ளதாகவும் அது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் பட்ட அரிசி என்றும் உறுதி படுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய வாய்ப்பு இருந்தும் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, ஒரு இடைத்தரகர் மூலம் அரிசியை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக விலைக்குக் கொள்முதல் செய்வது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. முன்னதாகக் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, மியான்மர் மற்றும் துபாயிலிருந்து மொத்தம் 100,000 டன் அரிசியை வாங்க வங்கதேச அரசின் அரிசி கொள்முதல் ஆலோசனைக் குழு ஒப்புதல் கொடுத்தது.
மியான்மரிலிருந்து 50,000 டன் (Atap) அட்டாப் அரிசியும், துபாயிலிருந்து 50,000 டன் பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசியும் மொத்தம் 446.23 கோடி டாக்கா பணத்துக்கு கொள்முதல் செய்யப் படும் என்று கூறப் பட்டுள்ளது. உணவு பற்றாக்குறையை த் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும் அது அரசின் கொள்கை முடிவு என்றும் கூறியுள்ள அந்நாட்டு உணவு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவின் இயக்குனர் முகமது மோனிருஸ்மான், சுமார் 1.5 மில்லியன் டன் அரிசி இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதிக விலைக்கு இந்திய அரிசியை வங்கதேசம் துபாயில் இருந்து வாங்குவதற்கு இந்தியாவுடனான நல்லுறவை யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கெடுத்துக் கொண்டதே காரணம் என்று அரசியல் மற்றும் வணிக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் அடைந்த பிறகு, வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான நட்பை வளர்ப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.
வங்கதேசம் என்ற ஒரு நாடு உருவாக்கிக் கொடுத்த இந்தியாவை புரக்க்கணித்ததோடு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தார் யூனுஸ். சுற்றிலும் நிலங்களால் சூழப்பட்ட இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களின் கடல் பகுதி பாதுகாப்பு வங்கதேசத்திடம் உள்ளது என்றும், அந்தப் பகுதி விரைவில் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான பகுதியாக மாறுமென்றும் சீனா சென்றிருந்தபோது அறிவித்தார்.
தொடர்ந்து, இந்தியாவிலிருந்து நிலம் வழியாக நூல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம் கட்டுப்பாடு விதித்தது. இதற்குப் பதிலடியாக வங்கதேசத்துக்கான டிரான்ஷிப்மென்ட் வசதியை இந்தியா ரத்து செய்தது.
மேலும், ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மரத்தால் ஆன நாற்காலி, மேசை போன்ற பொருட்களைச் சாலை வழியாக இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு தடை விதித்தது.
வங்கதேசப் பொருட்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் இந்தியா விதிக்கவில்லை. மாறாகத் தரை வழியாக இறக்குமதி செய்வதற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. பாதைகளை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது. கூடுதலாகக் கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள துறைமுகங்களில் மட்டுமே ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது இந்தியா.
யூனுஸ் முன்னெடுத்த தவறான நடவடிக்கைகளால், இந்தியாவுடனான வங்கதேசத்தின் வர்த்தக உறவுகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அதிகமாகச் சார்ந்திருப்பதாலும், உள்நாட்டு ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் வங்கதேசத்தின் வர்த்தக பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவுடனான சிக்கலால் சுமார் 770 மில்லியன் டாலர் இழப்பை வங்கதேசம் சந்திக்கிறது. இது இருதரப்பு இறக்குமதியில் 42 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது. இப்படி யூனுஸ் தலைமையிலான வங்க தேசம் தனக்குத்தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறதே தவிர இதனால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
















