பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் வரை, தனது மகனை பிரதமராக்க நினைக்கும் சோனியா காந்தியின் கனவு ஈடேறாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் நாள்தோறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, முசாஃபர்பூர், வைஷாலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், லாலுவின் மகன் முதலமைச்சரானால், பீகாரில் ஆட்கடத்தல், பணம் பறிப்பு மற்றும் கொலை ஆகிய மூன்று புதிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும் என்று விமர்சித்தார்.
லாலு பிரசாத் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பிய அமித்ஷா, தங்கள் வாரிசுகளை மட்டுமே முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஆக்க விரும்புபவர்களால் பீகாரை முன்னேற்ற முடியுமா? எனக் கேட்டார்.
மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடியால் மட்டுமே பீகாரை முன்னேற்ற முடியும் எனக்கூறிய அவர், நிதிஷ்குமார் முதலமைச்சராகவும், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும் இருப்பதால், லாலு பிரசாத் மற்றும் சோனியா காந்தியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
















