இந்தியாவில் இந்த ஆண்டு, தீபாவளி விற்பனை 6 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் சுமார் 87 சதவீத மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கிக் குவித்துள்ளனர். இது பிரதமர் மோடியின் வரி குறைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று பாராட்டப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பொதுவாகவே பண்டிகைக் காலம் என்பது உற்சாகமான காலமே. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக் காலம் சிறப்பானது என்றே சொல்லலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகைக்கு, புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமின்றித் தங்கம் மற்றும் வைர நகைகள், கார்கள் மற்றும் பைக்கள் உட்பட ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கித் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இது குறித்து அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்த வர்த்தகம் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய வர்த்தக வரலாற்றில் மிக அதிகமான தீபாவளி வணிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பண்டிகைக் கால வர்த்தகம் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
நாடு முழுவதும் 60 முக்கிய விநியோக நகரங்கள், மெட்ரோ நகரங்கள், மாநில தலைநகரங்கள் மற்றும் இரண்டு மற்றும் மூன்றாம் தர நகரங்களில் நடத்திய விரிவான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
இந்தத் தீபாவளி விற்பனையில் மளிகை மற்றும் FMCG பங்கு 12 சதவீதமும், தங்கம் மற்றும் நகைகளின் பங்கு 10 சதவீதமும், மின்னணுவியல் மற்றும் மின்சாதனங்களின் பங்கு 8 சதவீதமும், நுகர்வோர் சாதனங்களின் பங்கு 7 சதவீதமும், ஆடை மற்றும் பரிசுகளின் பங்கு தலா 7 சதவீதமும், வீட்டு அலங்காரம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் பங்கு 5 சதவீதமும், இனிப்பு வகைகளின் பங்கு 5 சதவீதமும் மற்றும் இதர பொருட்கள் பங்கு 19 சதவீதமும் இருந்தன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்த நிலையில், பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக வரி குறைப்பு திட்டத்தை அறிவித்தார். GST 2.0 திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரி குறைப்பு உள்ளூர் விற்பனையை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இந்த வரி குறைப்பு, கார்களை மிக மலிவானதாக மாற்றியுள்ளது. நாட்டின் முன்னணி கார்த் தயாரிப்பாளர்களான மாருதி, டாடா மற்றும் மஹிந்திராவின் மாத விற்பனையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு, ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் சுமார் 100,000 க்கும் மேற்பட்ட கார்களை டெலிவரி செய்த சாதனைப் புரிந்துள்ளது. மாருதி தனது அனைத்து மாடல் கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா, எஸ்பிஐ உள்ளிட்ட நிதி சேவை நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் செலவினங்களில் அதிகமான வளர்ச்சியைக் கண்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளன. இந்தத் தீபாவளிக்கான விற்பனையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களின் Made In India பொருட்களின் விற்பனைக் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வந்த பிரதமர் மோடி உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே அதிகளவில் வாங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இப்போது பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கொண்ட நாட்டு மக்கள் உள்நாட்டுப் பொருட்களையே வாங்கி இருப்பதே விற்பனை அதிகரித்திருக்கக் காரணம் என்று கூறப் படுகிறது.
இந்திய வர்த்தகச் சூழலில் பண்டிகைக் கால விற்பனை வேகம் வரும் ஜனவரி மாதத்துக்குப் பிறகும் நீடிக்கும் என்று வணிக வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
















