கோயம்பேடு அருகே ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சென்னைக் கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
முன்பு குற்றவாளியாக இருந்த கணேசன் திருந்தி வாழ்ந்து வரும் நிலையில், இரு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பகுதியில் சவாரிக்காகக் காத்திருந்தார். அப்போது கணேசனை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கியுள்ளது.
இதில், படுகாயமடைந்த கணேசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கொளத்தூரைச் சேர்ந்த 5 பேர் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாகக் குழுவில் இருந்து விலகிய கணேசன், குற்றச்செயல்கள் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும், பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் 5 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
			















