கோவை விமான நிலையம் அருகே நண்பருடன் காரில் சென்ற கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மூவரையும் போலீசார் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். என்றாலும் பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு மெத்தனமாகவே இருந்துவருவதாகப் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் விமான நிலையம் அருகே, காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரின் கண்ணாடியைக் கத்தியால் குத்தி உடைத்துக் கார் கதவைத் திறந்துள்ளனர். பின்னர் அதிலிருந்த இளைஞரையும், கல்லூரி மாணவியையும் அந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியதாகத் தெரிகிறது.
பலமாகத் தாக்கியதில் இளைஞர் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குத் தூக்கிச் சென்ற கும்பல் அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்துள்ளது. மயக்கம் தெளிந்த இளைஞர் தனது செல்போன் மூலம் காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடம் வந்த பீளமேடு போலீசார்ப் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 28 தையல்கள் போடப்பட்ட நிலையில், இளைஞருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொருபுறம், இளைஞர் அளித்த தகவலின் பேரில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடிய போலீசார், உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் காணப்பட்ட கல்லூரி மாணவியை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவிக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் தப்பியோடிய 3 பேரையும் பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி கோவைத் துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பகுதியில் வைத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது அவர்கள், கையில் வைத்திருந்த அரிவாளால் தலைமைக் காவலர் சந்திரசேகர் என்பவரைத் தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.
அப்போது போலீசார், மூவரையும் காலில் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து மூவரையும் கைது செய்து சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குற்றவாளிகள் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த தலைமைக் காவலரும், மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். விசாரணையில் அவர்கள், தவசி, கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மக்கள் மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதேபோல, மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். முதன்முதலில் இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாணவிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள நயினார் நாகேந்திரன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், அதுகுறித்து எந்தவொரு கவலையும் இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார்.
அதேபோல, அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அதிமுக ஆட்சியின்போது பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் யாராக இருப்பினும், அரசு அவர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜகத் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், திமுக ஆட்சியில் சமூக விரோதிகளுக்குச் சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும் பயமில்லாமல் போய்விட்டதாகவும், தொடர்க் குற்ற சம்பவங்களே இதற்குச் சாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விமர்சகர்களைக் கைது செய்ய மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், இதையெண்ணி தலைகுனிய வேண்டும் என்றும் அவர்ச் சாடியுள்ளார். இதேபோல, தவெகத் தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறாதபோது, அதற்குள் மற்றொரு மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை நடப்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு நேர்ந்த கொடூரம் மனதை நடுநடுங்க வைப்பதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாத ஒரு இருண்ட ஆட்சியைத் திமுக நடத்தி வருவதாக விமர்சித்த தமிழிசைச் சௌந்தரராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், கோவைச் செஞ்சிலுவை சங்கம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகளிர் அணியினர் பெப்பர் ஸ்ப்ரேவைக் கையிலேந்தி, தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், திமுக அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தைப் பாஜக முன்னெடுக்கும் எனக் கூறினார். 2017-ம் ஆண்டு நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக இருந்த கோவை, தற்போது அந்தப் பெயரை இழந்துவிட்டதாகவும் அவர் வேதனைத் தெரிவித்தார். மேலும், பெண்கள் உரிமைகளைப் பற்றி பேசும் திமுக அரசு, அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவம், மக்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் எனப் பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
			















