கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி நிஷா பானு, இதுவரை அங்கு பொறுப்பேற்காததால், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி, நீதிபதி நிஷா பானுவைக் கேரள உயர்நீதிமன்றத்திற்கு மத்திய அரசு இடமாற்றம் செய்தது.
இதனையடுத்து, நீதிபதி நிஷா பானு அக்டோபர் 14ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதித்துறைப் பணிகளை நிறுத்தினார்.
ஆனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 3 வாரங்கள் கடந்தும், அவர்க் கேரள உயர்நீதிமன்றத்தில் இதுவரைப் பொறுப்பேற்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், அதே பட்டியலில் இடமாற்றம் செய்யப்பட்ட பிற நீதிபதிகள் அனைவரும் உடனடியாக அவரவர் நீதிமன்றங்களில் பொறுப்பேற்று, பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
இது நீதிபதியின் நீதித்துறை ஒழுங்கீனம் மற்றும் ஆணவத்தின் உச்சபட்ச வெளிப்பாடு எனக் கடுமையாக விமர்சித்த அவர்கள், நீதிபதி நிஷா பானுவின் இந்தச் செயல், சென்னை உயர்நீதிமன்றத்தின் நற்பெயரைக் கெடுப்பதாகவும், நீதித்துறையின் மாண்புக்கும் களங்கத்தை ஏற்படுத்துதாகவும் கவலைத் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக நீதிபதி நிஷா பானு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
















