லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு, தைரியமாக FALOODA SHOP தொடங்கி, இன்று இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார்க் கரூரை சேர்ந்த பிரதீப் கண்ணன். யார் இந்த இளைஞர்? . விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் கண்ணன். இளம் வயதில் இருந்தே தொழில்துறையில் ஏதாவது சாதனைப் படைத்திட வேண்டும் என்ற வேட்கையுடன் வளர்ந்த இளைஞர். ஆனால், அதற்கான பொருளாதாரம் இல்லாததால், அவரது கனவு நிறைவேறுவதில் தடை ஏற்பட்டது.
சிறுவயதில் இருந்தே கொண்டிருந்த லட்சியத்துக்குப் பணம் தடையாக இருக்கிறதே என்றெல்லாம் பிரதீப் கண்ணன் துவண்டு விடவில்லை. கல்வியே பேராயுதம் என்பதில் நம்பிக்கைகொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார். அவரது நல்ல எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் ஏற்ப, சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.
பெங்களூருவில் உள்ள ORACLE INDIA நிறுவனத்தில் OPERATIONS HEAD வேலை. லட்சக்கணக்கில் சம்பளம். காலை 9 மணிக்கு அலுவலகம் சென்றால், மாலை 5 மணிக்கு வீடு திரும்பி விடலாம். ஒரு சாமானிய மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சௌகரியத்தையும் அவர்ப் பெற்றிருந்தார்.
ஆனால், உறுதியான மனப்பான்மைக் கொண்டவரான பிரதீப் கண்ணனுக்கு, தொழிலதிபராக வேண்டும் எனும் லட்சியத்தீ மனதில் கொளுந்து விட்டு எரிந்தது. அதற்காக நிறுவனத்தில் நன்கு உழைத்து, தனது ஊதியத்தை உயர்த்திக் கொண்டே சென்றார். அதே வேளையில், எந்தத் தொழிலில் வெற்றிக் கிட்டும் என ஒரு புறம் யோசித்துக் கொண்டே இருந்தார்.
ஒரு சமயத்தில் பிரதீப் கண்ணனின் நீண்ட கால கனவு நிறைவேறுவதற்கான சூழல் பிறந்தது. கையில் லட்சக்கணக்கில் பணமும், FALOODA SHOP தொடங்கலாம் என்ற ஐடியாவும் கிடைத்தது. இதற்கு மேல் என்ன வேண்டும்…. வேலையை விட துணிந்தார் பிரதீப் கண்ணன். நம் நாட்டில் ஒருவர் வேலையை விடுவது என்ன அவ்வளவு சாதாரணமான விஷயமா? குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு தரப்பிடம் இருந்தும் நெருக்கடி.
நீ ஜெயித்துவிட்டால் சரி… ஒரு வேளைத் தோற்றுவிட்டால் என்ன ஆகும்? யோசித்துப் பார்… வேலையை விட்டு விடாதே என்ற வார்த்தைகளே பிரதீப் கண்ணனின் காதுகளில் அதிகம் விழுந்தன. இதற்கெல்லாம் அந்த இளைஞர் அஞ்சவில்லை. துணிந்து வேலையை ராஜினாமா செய்தார்.
சொந்த ஊரான கரூருக்குத் திரும்பிய அவர், FALOODA SHOP தொடங்கினார். ஆரம்பத்தில் எல்லோரையும் போல் தடுமாற்றம். போட்ட கைக்காசு வருமா? என்று யோசிக்கும் அளவுக்கு படுதோல்வி. ஆனால், பிரதீப் கண்ணன் முயற்சித்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தொழில் ரகசியம் பிடிபட கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார் கரூர் இளைஞர்.
இன்று அவரது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்ன தெரியுமா? இந்தியா, துபாய் என 18 இடங்களில் FALOODA SHOP கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. தற்போது ice-cream BRAND-ஐ உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பிரதீப் கண்ணன், நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
















