நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காவிரி ஆற்றங்கரையிலும், மின் மயானத்திலும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விதிமுறைகளை மீறி கொட்டப்படும் குப்பைகள் குறித்து பலமுறைப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 12 வார்டுகளை உள்ளடக்கிய பள்ளிப்பாளையம் நகராட்சியின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த சில சிலமாதங்களாகவே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் காவிரி ஆற்றின் அருகே உள்ள கால்வாய் மற்றும் மயானத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கால்வாய்களில் கொட்டப்படும் குப்பைகளால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுத் துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நகராட்சி நல அலுவலரிடம் பலமுறைப் புகார் அளித்தும், தமக்கும் இந்தச் செயலுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போல நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு மயான பூமியில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றியுள்ள குடியிருப்புகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைக் கழிவுகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது குப்பைகளால் எரிப்பதில் இருந்து வெளிவரும் புகைக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் கொட்டப்படும் குப்பைகளை முறையாகத் திடக்கழிவு திட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி, ஆற்றங்கரையிலும் மின் மயானத்திலும் கொட்டிவரும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.
			















