சாலையில் குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு, 250 ரூபாய் சன்மானம் தரப்படும் எனப் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவித்து உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாகக் குப்பை சேகரிக்க வந்தாலும் பலரும் குப்பையைக் கொடுக்காமல் வீதிகளில் வீசி செல்வதால் நகரின் பிரதான சாலைகள் கூட குப்பை மேடாகக் காட்சி அளிக்கின்றன.
இதனால் பெங்களூருவில் குப்பைப் பிரச்னை அரசுக்குத் தீராத தலைவலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் குப்பைகளை வீதியில் வீசும் நபர்களின் வீட்டு வாசலில் குப்பைகளை அதிகாரிகள் கொட்டினர்.
தற்போது குப்பைப் பிரச்னையை கட்டுப்படுத்த புதிய முயற்சியில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் இறங்கி உள்ளது.
அதன்படி சாலையில் குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு, 250 ரூபாய் சன்மானம் தரப்படும் என்றும் குப்பை வீசும் நபருக்கு ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் குப்பை வீசும் சம்பவங்கள் குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
			















