உலகின் முதன்மையான வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா உருவாக்கி உள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் புதிய S-500 ப்ரோமிதியஸ் ( Prometey)வான் பாதுகாப்பு அமைப்புபற்றி ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தி அனைத்தையும் தரைமட்டமாக்கியது இந்தியா.
தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா தாக்கி அழித்தது. இந்தத் தற்காப்பு தாக்குதலில் இந்தியாவின் S -400 வான்பாதுகாப்பு முக்கிய பங்காற்றியது.
ரஷ்யாவின் S-500 ப்ரோமிதியஸ், S -400 வான் பாதுகாப்பு அமைப்பின் மேம்படுத்தப்பட்ட அமைப்பு மட்டுமல்ல. அதைவிட மேலதிக திறன் கொண்ட ஒரு புதிய போர் மிருகமாகும். பண்டைய கிரேக்க நெருப்புக் கடவுளின் பெயரிலான S-500 ப்ரோமிதியஸ், சாலை-மொபைல், வான் மற்றும் கடல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும்.
S-500 பரந்த அளவிலான போர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரேடாரின் கண்ணுக்குப் புலனாகாத போர் விமானங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் உட்பட அனைத்தையும் நொடிகளில் மிகத் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, 600 கிலோமீட்டர் வரை இடைமறிக்கும் வரம்பையும், 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கண்டறியும் திறனையும் கொண்டுள்ளது. 200 கிலோமீட்டர் உயர கவரேஜ் கொண்ட S-500 வான் பாதுகாப்பு அமைப்பில், 77H6-N மற்றும் 77H6-N1 ஆகிய ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு இடைமறிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அமெரிக்க F-35 மற்றும் B-2 குண்டுவீச்சு விமானங்களை அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும். இந்தப் புதிய வான் பாதுகாப்பு அமைப்பில் 2000 கிலோமீட்டர் வரை கண்டறிதல் வரம்பைக் கொண்ட மேம்பட்ட AESA ரேடார் அமைப்பு பயன்படுத்தப் பட்டுள்ளது.
9 அல்லது 10 வினாடிகளில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட S-400 யை விட S-500 வெறும் 3 வினாடிகளில் விரைவான பதிலடி கொடுக்கும் என்று கூறப் பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் S-500, விநாடிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில், 10 பாலிஸ்டிக் சூப்பர்சோனிக் ஏவுகணைகளைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, S-500 வான் பாதுகாப்பு அமைப்பு, ஹைப்பர்சோனிக் வேகத்தில் மணிக்கு 12,348 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும். இதனால், ‘HIT-TO-KILL’ என நொடியில், எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது.
S-500, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களைக் கண்காணித்து அழிக்கும் திறன் கொண்டதால், எதிரியின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பை சீர்குலைக்கும் திறனையும் கொண்டுள்ளது. ஆகவே ஏவுகணைகள், விண்கலம் மற்றும் சுற்றுப்பாதை ஆயுத தளங்களை முடக்குவதோடு, விண்வெளி சுற்றுப்பாதை தளங்களில் இருந்து ஏவப்படும் விண்வெளி ஆயுதங்களையும் S-500 வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டதாகும். இது விண்வெளிப் போரில் ரஷ்யாவின் மேலாண்மையை நிலைநிறுத்தி உள்ளது.
S-400, S-300VM4, S-350 வித்யாஸ் மற்றும் பிற தளங்களுடன் ஒற்றை வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பில் S-500 இணைக்கப்படும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளது. ரஷ்யாவின் அதிநவீன S -500 வான் பாதுகாப்பை வாங்கும் G2G ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் இந்தியாவுடன் இணைந்து S -500யை கூட்டு உற்பத்தி செய்ய உள்ளது. இந்திய முப்படைகளில் ஐந்து S-400 பயன்பாட்டில் உள்ளன.
மேலும் மூன்று S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் அடுத்த ஆண்டுக்குள் இந்திய இராணுவத்தில் இணைக்கப்படவுள்ளது. முன்னதாக, 100 சதவீத தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் கூடிய Su-57E ஸ்டெல்த் போர் விமானங்களை ரஷ்யா இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
எதிர்கால போர் தயார்நிலைக்கு ப்ராஜெக்ட் குஷா மற்றும் உள்நாட்டு நீண்ட தூர வான் பாதுகாப்புக்காக சுதர்ஷன் சக்ரா திட்டம் என உருவாக்கி வரும் இந்தியாவுக்கு S -500, உயர் தொழில்நுட்ப ராணுவ திறன்களை பன்முகப்படுத்தவும் உள்ளூர்மயமாக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.
















