உலகளாவிய உற்பத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல பன்னாட்டு நிறுவனங்கள் உயர் மதிப்புள்ள உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதிக்கான தளமாக இந்தியாவை தேர்வு செய்வது, நாட்டை ஒரு புதிய உற்பத்தி சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
உலகளாவிய உற்பத்தி துறையில் இந்தியாவின் எழுச்சி நாட்டின் தொழில்துறையில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. வெறும் நுகர்வோர் சந்தையாக மட்டுமே இருந்த இந்தியா கடந்த சில ஆண்டுகளில், அந்த நிலையிலிருந்து உயர் மதிப்புள்ள உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
அரசின் உற்பத்தி ஊக்குவிப்பு கொள்கைகள், திறமையான மனிதவளம் மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி மறுசீரமைப்பு ஆகியவை இதற்கு உறுதுணையாக அமைந்தது. இதன் விளைவாக, FORD, HP, LG போன்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை தங்களின் மூல உற்பத்தி மற்றும் புதுமைக்கான தளமாகக் காணத் தொடங்கியுள்ளன.
இதன் மூலம், இந்தியா ஒரு புதிய உலகளாவிய உற்பத்தி சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தி வருகிறது. அமெரிக்க நிறுவனமான FORD-ன் சமீபத்திய ஆய்வறிக்கை முடிவுகள் இதனை அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சென்னை FORD ஆலை தற்போது ஏற்றுமதி சந்தைகளுக்கான உயர் திறன் கொண்ட இஞ்சின்களை ஆண்டுக்கு இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாகத் தயாரிக்க மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த உற்பத்தி செலவில் உருவாக்கப்படும் இந்த இஞ்சின்கள் அமெரிக்காவிற்கு மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான HP-யும் தனது அனைத்து LAPTOP-களையும் இந்தியாவில் தயாரிக்க தீர்மானித்துள்ளது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கணினிகளும் இந்திய ஆலைகளிலேயே தயாராகும் எனவும், அவற்றின் ஏற்றுமதிகளும் இந்தியாவிலிருந்தே நடைபெறும் என்றும் HP நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ரிகே லோரஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் “உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டம்”, “மேக் இன் இந்தியா” மற்றும் “டிஜிட்டல் இந்தியா” ஆகிய திட்டங்களுடன் இவை ஒருங்கிணைக்கப்படுவதால், இந்தியா உலக கணினி உற்பத்தி சங்கிலியில் முக்கிய ஏற்றுமதி மையமாக உருவெடுக்கவுள்ளது. அதே நேரத்தில், தென் கொரிய தொழில் நிறுவனங்களும் இந்தியாவை நீண்டகால தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பிற்கான தளமாகக் காணத்தொடங்கியுள்ளன.
அதன் மூலம், LG போன்ற அந்நாட்டின் நிறுவனங்கள், தற்போது மின்னணு உற்பத்திக்கான மூலதன பொருட்களை கொரியா, சீனா மற்றும் வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் முடிவை ஆராய்ந்து வருகின்றன. அதனுடன் நொய்டாவில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஒரு உலக தரத்திலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவும் LG நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவை வெறும் உற்பத்தி மையாக மட்டும் அல்லாமல், புதுமை மற்றும் ஆராய்ச்சிக்கான தளமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசின் நிலையான தொழில் கொள்கைகளும், இளம் தொழில்நுட்ப அறிவுமிகுந்த ஆங்கிலம் பேசும் மனிதவளமும், அமெரிக்கா – சீனா வணிக மோதல்களும் இந்த மாற்றத்திற்கான 3 முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.
இந்தச் சக்திகள் இணைந்து இந்தியாவை உலக சந்தைகளுக்கான புதிய உற்பத்தி மையமாக உருவாக்கி வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு உலகளாவிய உற்பத்தி சக்தியாக இந்தியா உருவெடுத்து வருவதை இந்த முன்னேற்றங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
















