இந்தியா – சீனா இடையே எல்லையோர பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் “பூர்வி பிரச்சண்ட பிரஹார்” எனும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தவுள்ளன. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
இந்தியா நீண்ட காலமாகத் தனது பாதுகாப்பு கட்டமைப்புகளைப் பாகிஸ்தானை மையமாகக் கொண்டே வடிவமைத்து வந்தது. 1947-ம் ஆண்டு நடந்த பிரிவினைக்குப் பின் இருநாடுகளுக்குமிடையே நடந்த பல போர்களும், காஷ்மீர் பிரச்னையும், அந்நாட்டில் இருந்து வந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களுமே அதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
இதனால் இந்தியா தனது மேற்கு கடற்கரை மற்றும் வடமேற்கு எல்லைகளில் பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தை அதிகரித்தது. தற்போது கடந்த ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட சீனாவின் எழுச்சியும், அதன் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையும் இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்தியாவுடன் சுமார் 3 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள சீனா, இந்திய பாதுகாப்பு அம்சங்களுக்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாகக் கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா – சீனா மோதல், சீன ராணுவத்தின் எல்லை ஊடுருவல் முயற்சிகள், சீனாவால் ஹிமாலய மலைப்பகுதிகளில் உருவாக்கப்படும் புதிய குடியிருப்புகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீனாவின் “STRING OF PEARLS” எனப்படும் கடற்படை வலையமைப்பு ஆகியவை இந்தியாவின் பாதுகாப்பு சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்தியா தனது கிழக்கு எல்லை பாதுகாப்பிலும் பெரும் முதலீடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக லடாக், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் போன்ற கிழக்கு பிராந்திய பகுதிகளில் மத்திய அரசு, சாலைகள், சுரங்க ரயில் பாதைகள், விமான தளம் போன்ற அடிப்படை அமைப்புகளை மேம்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இணைந்து “குவாட்” கூட்டணியின் மூலம், இந்திய பிராந்தியங்களில் உள்ள சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக வரும் 11-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை, சீன எல்லையில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தின் மேச்சுக்கா பகுதியில், “பூர்வி பிரச்சண்ட பிரஹார்” எனும் கூட்டு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய பாதுகாப்பு படைகள் முடிவு செய்துள்ளன. முன்னதாக நடந்த பாலா பிரஹார் மற்றும் பூர்வி பிரஷார் போன்ற பயிற்சிகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை இந்திய முப்படைகளின் ஒருங்கிணைந்த போர்த்திறனை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டவுள்ளதாகத் துறை சார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். “THEATER COMMAND” எனப்படும் இந்திய முப்படைகளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பைச் சோதிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இது இந்தியாவின் மூப்படைகளும் இணைந்து ஒரே கட்டுப்பாட்டின் கீழ், போர்த்திறனை மேம்படுத்தும் நீண்டகால திட்டமாகக் கருதப்படுகிறது. உயர்ந்த மலைப்பகுதிகளைக் கொண்ட மேச்சுக்காவில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், சிறப்புப் படைகள், ட்ரோன்கள், துல்லிய ஆயுதங்கள், செயற்கைக்கோள் வழி தகவல் தொடர்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் சோதிக்கப்படவுள்ளதாகத் துறை சார்ந்த உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிலம், ஆகாயம் மற்றும் கடல் என மூன்று தளங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள முழுமையான போர் சூழலை மாதிரியாகக் கொண்டு, இந்தியா தனது தொழில்நுட்பங்களையும், துரித களத்திறனையும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கை மேற்கில் பாகிஸ்தானையும், கிழக்கில் சீனாவையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தும் எனத் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைகளில் ஏற்கனவே “திரிசூல்” எனப்படும் மற்றொரு கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாகக் கிழக்கில் சீனாவின் எல்லைக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் “பூர்வி பிரச்சண்ட பிரஹார்” நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியா சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக நாட்டின் இரு திசைகளிலும் ஒரே நேரத்தில் கூட்டு ராணுவ நடவடிக்கைகளை நடத்தவுள்ளது. சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், இந்தச் செயல் இந்தியாவின் தன்னம்பிக்கையையும், போர் திறனையும் உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
















