பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது, தெற்காசியாவின் அணு ஆயுத அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
பயங்கரவாதத்தின் ஊற்றாகத் திகழ்ந்து வரும் பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் தொடர்பான மர்மங்கள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அண்மையில் பேசியிருந்த அதிபர் டிரம்ப், ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானும் ரகசியமாக நிலத்துக்கு அடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியிருந்தார்.
இது தெற்காசியாவின் பாதுகாப்பு சமநிலையில் புதிய விவாதத்தைக் கிளப்பியது. அவரது கூற்று பாகிஸ்தானின் பிராந்திய அரசியல் நுணுக்கங்களையும், அந்நாட்டின் அணு ஆயுத கட்டுப்பாட்டைச் சுற்றிய சந்தேகங்களையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. ஆனால், டிரம்பின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த பாகிஸ்தான், அவரது கூற்று அடிப்படை ஆதாரமற்ற கருத்து என விமர்சித்தது.
மேலும், கடந்த 1998-ம் ஆண்டு முதல் தங்கள் நாடு தன்னார்வத்துடன் அணு ஆயுத சோதனை தடைக்கு இணங்கிச் செயல்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு விளக்கியிருந்தது. ரச்கோ மலைப்பகுதி மற்றும் கரான் பாலைவனத்தில் கடந்த 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட, 6 வெடிப்புகள் அடங்கிய அணு ஆயுத சோதனையையே பாகிஸ்தான் இதுவரை உறுதிபடுத்தியுள்ளது.
ஆனால், கடந்த ஏப்ரல் 30 முதல் மே 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட இரு நிலநடுக்கங்கள், அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுக்குத் தீனி போட்டன. அப்போது அது இயற்கையாகவே நில அதிர்வுகள் அதிகமாக நிகழும் பகுதி என்பதை விவரித்த புவியியல் நிபுணர்கள், டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் உலகளாவிய கண்காணிப்பு முறைமைகள் எந்தவொரு அணு வெடிப்பு குறியீட்டையும் பதிவு செய்யாதது டிரம்பின் கூற்றைப் பொய்யாக்கியது. அதே நேரத்தில், உயர் திறன் கொண்ட கண்காணிப்பு அமைப்புகள் உள்ள இந்தக் காலகட்டத்தில், இது போன்ற சோதனைகளை மறைமுகமாக நடத்துவது சாத்தியமற்றது எனத் துறை சார்ந்த வல்லுநர்களும் தெளிவாக விளக்கினர்.
இருப்பினும், அதிபர் டிரம்பின் முந்தைய குற்றச்சாட்டு, பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டுப்பாடு யாரிடம் உள்ளது என்ற கேள்வியை எழுப்பி அதனை விவாதப் பொருளாகவும் மாற்றியது. அதற்குத் தனது தேசிய கட்டளை ஆணையம் மூலம் விளக்கமளித்த பாகிஸ்தான் அரசு, முழுமையான அணு ஆயுத கட்டுப்பாடும் ராணுவத்தின் கீழ் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அண்மையில் வாய்திறந்த முன்னாள் CIA அதிகாரி ஜான் கிறியாகூ, முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப் காலத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை அமெரிக்காவே கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனை இஸ்லாமாபாத் மறுத்துள்ளபோதிலும், இதில் அமெரிக்காவின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது இதுவரை தெளிவாகவில்லை. பல ஆண்டுகளாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத ஆபத்துகள்குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. தேவைப்பட்டால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா ரகசிய திட்டம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு NBC NEWS என்ற தனியார் ஊடகம் வெளியிட்ட செய்திகளும் இந்தத் தகவல்கள் உண்மை என்பதை அடிக்கோடிட்டு காட்டின.
இதனிடையே அமெரிக்க பாதுகாப்பு நுண்ணறிவு அமைப்பு வெளியிட்ட 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் அறிக்கையில், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி, குறைந்த சக்திகொண்ட தற்காலிக போராட்ட அணு குண்டுகளை உருவாக்கியுள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூற்று இந்தியாவிற்கு, பெரிய அபாயத்தை உருவாக்கக்கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இவையனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அடிப்படை ஆதாரங்கள் இல்லையென்றாலும், டிரம்பின் கூற்று பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் எத்தனை மறைமுகமாகவும், வெளிநாட்டு செல்வாக்குடனும் செயல்படுகிறது என்ற கேள்வியை முன்னிறுத்தியுள்ளது.
















