செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரக்கூடிய மங்கள்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்த இந்தியா, மங்கள்யான்-2 திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கும் வகையிலான ஒரு புதிய விண்வெளி பயணத் திட்டம் 2030-ல் நிறைவேற்றப்படும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.அதுபற்றியய ஒரு செய்தி தொகுப்பு.
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சி 1960-களிலேயே தொடங்கிவிட்டது. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் 2013-க்கு முன்பு வரை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பி இருந்தது. இந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் 2014 செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.மங்கள்யான் வெற்றி, உலகையேதிரும்பிப் பார்க்கக வைத்தது.
மிகக் குறைந்த செலவில் வெறும் 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யானை அனுப்பியது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் ஆசிய நாடாகவும், முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்த, உலகின் முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. மேலும், மங்கள்யான் திட்டக் குழுவுக்கு விண்வெளி முன்னோடி விருதை அமெரிக்காவின் தேசிய விண்வெளி சங்கம்வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மங்கள்யான் ஆசியாவின் பெருமை என்று சீனா பாராட்டியது.
ஏழு ஆண்டுகளுக்கும்மேலாகச் செயல்பட்டட மங்கள்யான் விண்கலம், 2022ஆம் ஆண்டு, செயலிழக்கும் வரை செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம், கனிம கலவை மற்றும் மேற்பரப்பு இமேஜிங் பற்றிய விலைமதிப்பற்ற பல தரவுகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ மங்கள்யான்-2 திட்டத்தை உருவாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் முன்னதாக மங்கள்யான் 2 விண்ணில் ஏவுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மங்கள்யான் ஒன்றை போலல்லாமல், இந்த முறை, செவ்வாய் கிரக மேற்பரப்பில் நேரடியாகத் தரையிறங்குவதற்கான திட்டமாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்த நவரத்னா மாநாட்டில் சிறப்புரையாற்றிய உரையாற்றிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன், மங்கள்யான் 2 திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்தார். மங்கள்யான் ஒன்றில், செவ்வாய் கிரக சுற்றுப்பாதை விண்கலமாக இருந்ததைப் போலல்லாமல், மங்கள்யான்-2 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்குவதையும், ஒரு ரோவரை நிலைநிறுத்துவதையும், ஒரு ஹெலிகாப்டரை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது வேறொரு கிரகத்தைத் தொடும் இந்தியாவின் முதல் நேரடி முயற்சியாகும்.
LVM3 ராக்கெட்டில் ஏவப்படும், 4,500 கிலோ எடையுள்ள மங்கள்யான் 2, ஆரம்பத்தில் பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். பிறகு ஒரு பயண நிலை மற்றும் ஒரு இறங்கு நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய செவ்வாய் கிரகத்துக்கான பல மாத பயணத்தைத் தொடங்கும். மங்கள்யான்-2 செவ்வாய் கிரகத்தின் அருகே வந்ததும், இறங்கு நிலை பயண நிலையிலிருந்து பிரிந்து தரையிறங்குவதற்கு முன் கிரகத்தைச் சுற்றி வரும் வழக்கமான முறைக்கு மாறாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நேரடியாக நுழையும்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.3 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது தரையிறக்கத்தின் இறுதி கட்டம் தொடங்கும். செவ்வாய் கிரகத்தின் சவாலான நிலப்பரப்பில் பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்வதற்காக, இஸ்ரோ மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
வேகத்தைக் குறைக்க செவ்வாய் வளிமண்டலத்தைப் பயன்படுத்தும் ஏரோபிரேக்கிங் தொழில்நுட்பமும், இதைப் பாதுகாப்பாகச் செய்ய, வெப்ப-பாதுகாப்பு ஏரோஷெல் மற்றும் சூப்பர்சோனிக் பாராசூட்களைப் பயன்படுத்தப்படுகிறது. இது விண்கலம் கடுமையான வளிமண்டல உராய்வைத் தாங்கி வேகத்தை விரைவாகக் குறைக்க உதவுகிறது. செவ்வாய் கிரகத்தின் புவியியல் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்கான அறிவியல் கருவிகளுடன் பொருத்தப்பட்டுள்ள ரோவர் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தில் வான்வழி ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டரும் பயன்படுத்தப் படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு அமைப்பு, வளிமண்டலம், கிரகங்களுக்கு இடையேயான தூசி மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவற்றை ஆராய்வதே மங்கள்யான்-2 திட்டத்தின் நோக்கமாகும். மங்கள்யான் 2 வெற்றி பெற்றால், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் திறன் கொண்ட முன்னாள் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும். ஏற்கெனவே, 2035க்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பதும், 2040க்குள் முதல் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது ஆகிய திட்டங்களுடன், சந்திராயன் 4, வெள்ளி கிரகத்தை ஆராய சுக்கிரயான் திட்டங்களும் இஸ்ரோவின் காலண்டரில் உள்ளன. விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனைகளைத் தொடர்ந்து செய்துவருவது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையே.
















