பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்களான லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகியவை இந்தியா மீது மீண்டும் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அம்மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாததுக்கு எதிராகத் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்புகளின் தலைமையகங்கள் உட்பட பயிற்சி முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
மேலும் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க இந்திய இராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தீவிர கண்காணிப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, சுமார் 120 பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளன.
ஜம்முவின் மேல் பகுதிகளில் செயல்படும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் விரைவில் அழிக்கப்படுவார்கள் என்று ஜம்மு மண்டல டிஜிபி பீம் சென் துட்டி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆப்ரேஷன் சிந்தூரில் தனது பயங்கரவாத நெட்ஒர்க்கில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பின் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு, “ஜமாத்-உல்-மோமினாத்” என்ற பெயரில் பெண் பயங்கரவாதிகளை உருவாக்கி வருகிறது. பெண்கள் தற்கொலைப் படையினர் மூலம் மீண்டும் இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தவும், பலவீனமான பயங்கரவாத நெர்வொர்க்கை மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டு வருவதாகக் கருதப் படுகிறது.
இந்நிலையில் தான், இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக உயர்மட்ட உளவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த உயர்மட்ட பயங்கரவாதிகளின் கூட்டத்தில், ஜமாத்-இ-இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் உளவுத் துறையான ISI அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் பயங்கரவாத ஸ்லீப்பர் செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும், முன்னாள் பயங்கரவாத தளபதிகளுக்கு நிதியளிக்கவும், ஆப்ரேஷன் சிந்தூர் இழப்புகளுக்குப் பழிவாங்கவும் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. மீண்டும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களைத் தொடங்கவும், அதற்கான தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவை பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்க மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டுள்ளது.
முன்னாள் SSG வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் அடங்கிய பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழுக்கள் (BATs) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக உளவுத்துறை மதிப்பீடுகள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாகப் பயங்கரவாதக் குழுக்கள் ஊடுருவல், உளவு பார்த்தல் மற்றும் எல்லை தாண்டிய தளவாடங்கள் ஆகியவை கடந்த செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளன என்றும், பாகிஸ்தானின் சிறப்புச் சேவைகள் குழுவான SSG மற்றும் ISI அதிகாரிகளின் உதவியுடன், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக, பயங்கரவாதி ஷம்ஷர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா பிரிவினர், ட்ரோன்களைப் பயன்படுத்தி வான் வழியாகக் கண்காணித்து, கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானின் மேற்கு எல்லைகளில் மிகப்பெரிய திரிசூல் முப்படை பயிற்சியை முதல்முறையாக இந்தியா நடத்தி வரும் நேரத்தில் இந்த உளவுத்துறை அறிக்கை ஒரு முக்கியமான எச்சரிக்கையாகப் பார்க்கப் படுகிறது.
அம்பாலாவில் போர் தயார்நிலையை மதிப்பாய்வு செய்த இராணுவத் தளபதி உபேந்திர திவேதி, திரள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் அடுத்த தலைமுறை போர் வியூகங்களை ஆராய்ந்துள்ளார். ஏற்கெனவே, வடக்கு கட்டளைப் பிரிவுகளில் இந்திய இராணுவமும் உளவுத் துறையும் மிக அதிக எச்சரிக்கையுடன் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக இந்திய இராணுவம், #WeAreReady என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், “எந்தவொரு பயங்கரவாதச் செயலும் ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும்” என்று சப்த சக்தி கட்டளையின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மன்ஜிந்தர் சிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்தியா மீது மீண்டும் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை நடத்தினால், ஆப்ரேஷன் சிந்தூர்-II பாகிஸ்தானுக்கு இரங்கல் செய்தியை எழுதும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
















