அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த வரிகள் சட்டப்படி சரியானதா என்ற கேள்வியை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் நீண்டநாள் எதிர்ப்பு நிலைபாட்டிற்கு தற்போது நியாயம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பதவி காலத்தில் இதுவரை விதித்துள்ள ஒருதலைப்பட்சமான வரிகள், இந்தியா உட்பட பல நாடுகளுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை மேற்கோள்காட்டி, இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரிகளை விதித்தார் அதிபர் டிரம்ப். ஆனால், இந்தியாவோ டிரம்பின் நடவடிக்கைகள் உலக வர்த்தக விதிகளுக்கு முரணானவை எனத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பல நாடுகள் டிரம்பின் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தலைவணங்கிய நிலையில், இந்தியா தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாமல் அமைதி காத்ததுடன், பொருளாதார பாதிப்புகளைத் தவிர்க்க பல்வேறு மாற்று வழிகளை உருவாக்கித் தன் நலன்களை பாதுகாத்தது. இந்நிலையில், டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் சட்டப்படி சரியானதா என்ற கேள்வி தற்போது அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் எழுந்துள்ள நிலையில், மீண்டும் டிரம்பின் நடவடிக்கைகள் மீது சர்வதேச வர்த்தக வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது. அதிபர் டிரம்ப் தனது ‘அவசர அதிகாரங்களை’ பயன்படுத்தி, வரிகளை விதித்தது அமெரிக்க சட்டத்தின் வரம்பை மீறியுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிபர் டிரம்பின் இறக்குமதி வரிகள் அமெரிக்க மக்களுக்கு விதிக்கப்பட்ட வரி போல மாறிவிட்டதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு நீதிபதியான கோனி பாரெட்டும், கடந்த 50 ஆண்டுகளில் எந்த அதிபரும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க சட்டமன்றத்திற்கு உட்பட்டது என நிர்ணயித்த, அமெரிக்க அரசமைப்பின் அடிப்படை கோட்பாட்டை மாற்றி, அந்த அதிகாரத்தை அதிபரிடம் ஒப்படைக்கும் ஆபத்தான நிலையை இது உருவாக்கியுள்ளதாக நீதிபதி நீல் கோர்சசும் எச்சரித்துள்ளார்.
இதனால் இந்த வழக்கின் மையமாக உள்ள INTERNATIONAL EMERGENCY ECONOMIC POWERS ACT, நாட்டின் அதிபருக்கு இத்தனை பரந்த அதிகாரங்களை அளிக்கிறதா என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. அதிபர் டிரம்பால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கு டிரம்புக்கு சாதகமாக இருக்காது எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல, சந்தை ஆய்வாளர்களும், முதலீட்டாளர்களும் கூட இதே மனநிலையில் உள்ளதால், டிரம்ப் மீண்டும் வெற்றிபெற்று வரிகளை நீட்டிப்பார் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது. இதனால் அதனை சார்ந்த பங்குகள் வெகுவாகச் சரிய தொடங்கியுள்ளன. டிரம்பின் இறக்குமதி வரி உலகளாவிய விலையேற்றத்திற்கும், வர்த்தக மந்தநிலைக்கும் காரணமாக இருப்பதால், நீதிமன்றம் விரைவில் டிரம்பின் வரிகளை ரத்து செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிபர் டிரம்ப் இதனை அரசியல் ரீதியிலான தாக்குதல் எனக்கூறி மழுப்பினாலும், நீதிமன்றத்தின் எதிர்வரும் தீர்ப்பு அவரது நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தனது வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு டிரம்ப் பல்வேறு காரணங்களை கூறி வந்தாலும், அவரது அதீத இறக்குமதி வரி விதிப்பு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் வர்த்தக மோதலை உருவாக்கியுள்ளது. குறிப்பாகக் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்தியாவின் எஃகு, அலுமினியம், மருந்து, துணி பொருட்கள் சார்ந்த துறைகளுக்கு அமெரிக்கா சுங்க கட்டணம் விதித்தது. ஆனால் இந்தியாவோ அதற்குப் பதிலடி கொடுக்கும் எண்ணத்தை விடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடுத்து தீர்வு காண முயன்றது.
இந்தச் சூழலில் தற்போது அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் நடவடிக்கைகள் சட்டப்படி தவறானவை எனத் தீர்ப்பளித்தால், இந்தியாவின் பொறுமையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட அணுகுமுறை சரியானது என்பது நிரூபணமாகும். இதனால், விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக வழங்கப்படவுள்ள தீர்ப்பு, இந்தியாவின் பொருளாதார நலன்களைக் காப்பதோடு, உலக வர்த்தகத்தில் சட்டப்பூர்வமான ஒழுங்குமுறை அவசியம் என்பதையும் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















