சேலத்தில் ஜவுளிபூங்காவுக்கான அறிவிப்பு வெளியிட்ட இடத்தில் சாயப்பட்டறை ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் டால்மியா போர்ட் அருகே 880 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளிபூங்கா அமைக்கப்படுவதாக அரசு வெளியிட்ட அறிவிப்பு அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேலைவாய்ப்பு பெருகுவதோடு உள்ளூர் பகுதிகளும் செழிக்கும் என்பதால் ஜவுளி பூங்காவை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஜவுளிப்பூங்கா அமையவிருந்த இடத்தில் சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு ஜாகீர் அம்மா பாளையம், புளியம்பட்டி, குள்ள கவுண்டனூர், வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாயப்பட்டறை ஆலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட அமைச்சர் ராஜேந்திரனிடமும் மட்டுமல்லாது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் சாயப்பட்டறை ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தங்களின் வீடுகளில் ஏற்றிய கருப்புக் கொடியை வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தியுள்ளனர்.
சாயப்பட்டறை ஆலை அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து இன்று வரை இத்திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
தங்களின் எதிர்ப்பையும் மீறி சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தொடர்ந்தால், தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பல்வேறு கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தடி நீருக்கும், விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















