இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் வெறும் மெல்லிசை மட்டுமல்ல, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் பாரதப் பாரம்பரியத்தின் சின்னமாகும். எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய இப்பாடல் பாரதத் தாயின் மந்திரமாகும். நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1875ம் ஆண்டு தான் எழுதிய வந்தே மாதரம் என்ற பாடலை, 1882 ஆம் ஆண்டு, தாம் எழுதிய ஆனந்தமத் என்ற நாவலில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி சேர்த்தார். இந்நாவலில் வரும் ஒரு நீண்ட கவிதையின் ஒரு பகுதியாகவே இந்தப்பாடலை சேர்த்தார். நாவலின் சூழலில் போர்க்குணமிக்க இந்து மதப் பண்பை இந்தக் கவிதையில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ஒரு வீரமிக்க தாய்நாடு என்ற புதிய அடையாளத்தை உருவாக்கினார்.
பிரிட்டிஷ் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை பெறுவதற்கான தேசியக் கூக்குரலின் சின்னமாக இந்தப் பாடலை இயற்றி இருந்தார். பாரத அன்னையைப் போற்றும் வகையிலும் ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தை அடையாளப்படுத்தும் வகையிலும் இந்தப் பாடல் உள்ளது.
தாய்நாட்டுக்கான தெய்வீகப் பாடலாக வந்தே மாதரம் உள்ளது. முதலில் வங்காள மொழி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வந்தே மாதரம் பாடல், இந்தியாவின் தேசிய பாடலாகப் பாடத் தொடங்கியபோது, பாடலின் முதல் இரண்டு சரணங்களில், அதாவது முதல் 12 வரிகளில் தூய சமஸ்கிருத வார்த்தைகள் மற்றும் அம்மொழி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரு மொழி அமைப்பு தான் வந்தே மாதரம் பாடலுக்கு ஒரு தெய்வீக தேசிய தொனியை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, சமஸ்கிருதப் பகுதி தாய்நாட்டை, பாரதத்தை ஒரு அன்னையாக, ஆதி பராசக்தியாக, மகா துர்கையாகப் போற்றுகிறது. வங்காள மொழி நடை இப்பாடலில் உணர்ச்சிபூர்வமான தெய்வப் பக்தி மற்றும் தேசபக்தியை ஊட்டுகின்றன. இந்தப் பாடல் ஆழ்ந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. சாதி மத வேறுபாடின்றி நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது. பாரதத்தின் வளமான இலக்கிய மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது நாட்டின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.
1896 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில் இந்தியாவின் தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூரால் இசையமைக்கப் பட்டு, முதன் முதலாக, வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. வந்தே மாதரம் இந்திய தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் துணைபுரிந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1901 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் அமர்வில் தாகினா சரண் சென் இப்பாடலைப் பாடினார். 1905 ஆம் ஆண்டு பனாரஸ் காங்கிரஸ் அமர்வில் கவிஞர் சரளா தேவி சௌதுராணி இப் பாடலைப் பாடினார்.
அதன் பிறகு லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். 1905 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் அரசியல் திரைப்படத்தை ஹிராலால் சென் தயாரித்தார். சோகத்தில் முடிந்த அந்தத் திரைப்படத்தில் மடாங்கினி ஹஸ்ரா, பிரிட்டிஷ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர் கூறிய கடைசி வார்த்தை வந்தே மாதரம் என்பதாகும்.
1907 ஆம் ஆண்டில், மேடம் பிகாஜி காமா, ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் வெளியிட்ட இந்தியாவின் தேசியக் கொடியில் வந்தே மாதரம் என்று பொறிக்கப் பட்டிருந்தது. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதிராய் போன்ற தேசியத் தலைவர்கள் இப்பாடலை நாட்டின் ஒற்றுமையின் அடையாளமாக அங்கீகரித்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில், பேரணிகளில், விடுதலைக்கான தேசியவாத இயக்கப் பொது கூட்டங்களில், போர் முழக்கமாகவே வந்தே மாதரம் பாடல் ஒலித்தது. இது நாடு முழுவதும் புதிய தேசபக்தி அலையை ஏற்படுத்தியது.
படிப்படியாக ‘தேசிய இயக்கத்தின் ஒரு உயிருள்ள மற்றும் பிரிக்க முடியாத உயிர் நாடியாக வந்தே மாதரம் பாடல் மாறியது. 1905ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய சுதேசி இயக்கத்துக்கு வந்தே மாதரம் பாடலே முக்கிய பங்கு வகித்தது. அப்போது, ஆங்கிலேய ஆட்சியாளர்களால் வந்தே மாதரம் பாடல் தடை செய்யப் பட்டது. பிறகு 1942ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கதின் வெற்றிக்கும் வந்தே மாதரம் பாடலே நாட்டு மக்களை ஒன்றிணைத்தது. வந்தே மாதரத்தைப் பரப்ப உதவிய தேசியவாதக் கவிஞர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவர் மகாகவி பாரதியார் தான்.
இந்தப் பாடலை முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாகவும், இரண்டாவது முறையாக 1908 ஆம் ஆண்டு ஒரு தனிப் பாடலாகவும் தமிழில் இயற்றி மக்களிடையே தேசப் பக்தியையும் தெய்வ சக்தியையும் ஊட்டினார் மகாகவி பாரதி. 1950 ஆம் ஆண்டு, இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டபோது, வந்தே மாதரம் பாடலே நாட்டின் தேசியப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் வந்தே மாதரத்துக்குப் பதிலாக ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன என்ற பாடல் நாட்டின் தேசிய பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. 1997ம் ஆண்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தே மாதரம் பாடலை ரீமிக்ஸ் செய்து இசையமைத்து வெளியிட்டார்.
அடுத்த தலைமுறை இந்திய இளைஞர்களிடையே ஏ ஆர் ரகுமானின் வந்தே மாதரம் பாடல் ஒரு தேசிய உணர்வை ஏற்படுத்தியது. 2003ம் ஆண்டில், எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான பத்து பாடல்களைத் தேர்ந்தெடுக்க ஒரு சர்வதேச வாக்கெடுப்பை பிபிசி உலக சேவை நடத்தியது. உலகம் முழுவதிலுமிருந்து தகுதி பெற்று தேர்வான சுமார் 7000 பாடல்களில் முதல் 10 இடத்தில் இரண்டாவது இடத்தில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றது.
சுமார் 155 நாடுகள் மற்றும் தீவைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரமே எல்லா காலத்திலும் புகழ் பெற்ற பாடல் என்று வாக்களித்திருந்தனர். வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாடப் படும் இந்த நேரத்தில், இன்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு புதிய உத்வேகத்தையும் புதிய ஆற்றலையும் தேசப் பக்தியையும் தெய்வப் பக்தியையும் இந்தப் பாடல் கொடுக்கிறது.
















