பிலிப்பைன்ஸைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திய‘ கல்மேகி’ புயல், வேகமெடுத்து, மத்திய வியட்நாமையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. கடும் சூறாவளியுடன் கூடிய இந்தப் புயல் மேற்கு நோக்கிக் கம்போடியா மற்றும் லாவோஸை நகர்ந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பசிபிக் சூறாவளி வளையத்தில் அமைந்துள்ள வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் இரண்டும் உலகின் மிகவும் சூறாவளியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், மேலும் உச்ச புயல் காலங்களில் தொடர்ந்து பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றன கல்மேகி- இந்த ஆண்டு தென் சீனக் கடலில் உருவான 13வது சூறாவளியாகும். இந்த ஆண்டின் உருவான மிகவும் சக்திவாய்ந்த புயல் இது எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த வாரத்தில் வரலாறு காணாத மழையுடன் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி, பிலிப்பைன்ஸையே புரட்டிப் போட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதி தீவுகளைக் கடந்து, தென் சீனாகக் கடல் நோக்கி நகர்ந்தது. இதில் அத்தீவுகளில் பலத்த சூறாவளியுடன் கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதில் பல மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின. இதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ஆற்றங் கரையோர வீடுகள் மற்றும் கரையோரங்களில் நின்றிருந்த பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கல்மேகி புயலுக்குக் கிட்டத்தட்ட 114 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 135-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்ற மீட்புக் குழுக்கள் விரைந்த நிலையில், அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தேசிய பேரிடர் காரணமாக நாட்டின் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸை வெள்ளக் காடாக்கிய கல்மேகி புயல், வியட்நாமுக்குள் நுழைந்த அந்நாட்டிலும் கடும் சூறாவளியாக வீசத் தொடங்கியுள்ளது.
வியட்நாமின் தேசிய வானிலை மையம், ஏழு மாகாணங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மூன்று மீட்டர் உயர அலைகள் டானாங் போன்ற கடலோர நகரங்களைத் தாக்கியுள்ளன.
ஹோ சி மின் நகரத்திலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ள டக்லக்கில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் எல்லாம் சாய்ந்து விழுந்துள்ளன. ஹோ சி மின் நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடல்மட்ட உயர்வும், சைகோன் நதியில் வெள்ளமும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாகப் பள்ளிகள், விரைவுச் சாலைகள் மற்றும் டா நாங் சர்வதேச விமான நிலையம் உட்பட எட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, 260,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் 6,700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் ஆறு விமானங்கள் தயார் நிலையில் உள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வியட்நாமை தாக்கிய யாகி புயலுக்கு சுமார் 200 பேர் உயிரிழந்ததும், 125-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்தன. கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு வியட்நாமை தாக்கிய மிகமோசமான புயலாக யாகி கருதப்படுகிறது.
















