பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் தங்கள் குடும்பத்தின் அதிகார நலன்களுக்காக மட்டுமே உழைக்கிறார்கள் என்றும், பீகாரின் ஏழை மற்றும் சாமானிய மக்களின் குழந்தைகளை குண்டர்களாக மாற்றியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இளம் தலைமுறையினருக்கு கணினிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கும், அதே வேளையில், ஆர்ஜேடி அவர்களுக்கு கைத்துப்பாக்கிகள் வழங்குவது குறித்து சிந்திக்கும் எனவும் விமர்சித்தார்.
ஆர்ஜேடியின் பிரசாரப் பாடல்களையும் முழக்கங்களையும் கேட்டால், நடுங்குவீர்கள் என்றும், பீகார் குழந்தைகளுக்காக ஆர்ஜேடி என்ன செய்ய விரும்புகிறது என்பது அதன் தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிவதாகவும் விமர்சித்தார்.
மேலும், பீகாருக்கு இனி துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை என்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















