தொழில்நுட்பக் கோளாறு, டெல்லி சர்வதேச விமான நிலையத்தை ஆட்டிப்படைத்து விட்டது. விமானச் சேவைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய GPS Spoofing பற்றி விரிவாகப் பார்க்கலாம்..
இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம். நாள்தோறும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில், அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 800-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை முடக்கிப்போட்டது.
விமான நிலையத்தில் உள்ள தானியங்கி அமைப்பான Automatic Message Switching System-த்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்கெல்லாம் காரணம் என்பது பின்னரே தெரியவந்தது… AMSS அதாவது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தரவுகளை நிர்வகிக்கும் முக்கியமான தானியங்கி செய்தி மாற்று அமைப்பு செயலிழந்ததே இதற்குக் காரணம் என்பதை இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
இப்படி ஒரு பிரச்சனை இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை என்பதுதான் வியப்பிலும் வியப்பு… விமானப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு விமானங்களின் திட்டமிடல், வழித்தட அனுமதி, வானிலை தகவல்கள் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு செய்திகளை AMSS அமைப்பு தானாகவே வழங்கிவிடும்… ஆனால் டெல்லி விமான நிலையத்தில் நடந்தது அதற்கு நேர்மாறானது.
அதுதான் GPS Spoofing. தவறான வழிகாட்டுதல் காரணமாக அதிகாரிகள், அனைத்து விமான திட்டங்களையும் தாங்களே கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் ஏற்பட்ட காலதாமதம் விமானப் போக்குவரத்து சேவையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. GPS spoofing, போலியான செயற்கைக் கோள் சிக்னல்களை வழங்குவதன் மூலம், அது விமானங்களை ஏமாற்றுவதோடு, தவறாகவும் வழிநடத்தும் ஆபத்தை உருவாக்குகிறது. டெல்லியில் கிழக்கு காற்று வீசும்போது, துவாரகா பக்கத்தில் இருந்து விமானங்கள் தரையிறங்கி, வசந்த் குஞ்ச் நோக்கிப் புறப்படும்.
ஆனால், AMMS தொழில்நுட்பக் கோளாறு விமானப் போக்குவரத்தில் நெரிசலை ஏற்படுத்தியது.. GPS Spoofing எப்படி வேலை செய்கிறது என்றால், போலியான செயற்கைக்கோள் சிக்னல்கள், GPS Recievers-களை சென்றடையும்போது, அது விமானங்களை ஏமாற்றுகிறது அல்லது தவறாக வழிநடத்திவிடுகிறது. இது விமானங்களை, உண்மையான வழித்தடங்களை விடுத்து தடம் மாறச் செய்துவிடுகின்றன. சிக்னல்களை முழுமையாகத் தடுக்கும் GPS Jamming போலன்றி, தவறான தொலைவுகளைக் கணித்து அனுப்பிவிடுகிறது.
இதனால் விமானங்கள் ரேடாரின் வேறு இடங்களில் தோன்றக்கூடும். கருங்கடல், மேற்கு ஆசியா உள்ளிட்ட உலகளாவிய சர்ச்சைக்குரிய பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு பதிவாகியிருக்கும் நிலையில், டெல்லி வான்வெளியில் இவ்வாறு பதிவாவது இதுதான் முதல்முறை. விமான ஓடுபாதைகள் மேம்படுத்துதலும் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக டெல்லி விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையான 10/28-இல் உள்ள Instrument Landing System தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டதால், நிலைமை மேலும் மோசமானது. டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) மற்றும் விமான ஒழுங்குமுறை அதிகாரிகள், ILS செயல்பாட்டை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
GPS jamming மற்றும் spoofing சர்ச்சைக்குரிய மண்டலங்களில் அதிகரித்திருப்பது ஆபத்தான அறிகுறி என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். போலியான தரவுகள் 2,500 கிலோ மீட்டருக்குப் பின்னரே விலகக்கூடும் என்பதால், இது சிவில் விமானப் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.. உலகெங்கிலும் உள்ள ஹாட்ஸ்பாட்களை ஏமாற்றுவது குறித்து விமான நிறுவனங்கள் முன்கூட்டியே எச்சரிக்கத் தொடங்கியுள்ளன.
பாதிப்பு ஏற்படும்போது VOR மற்றும் DME போன்ற பாரம்பரிய உதவிகளை நம்பியிருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை முழுமையாக நம்பியிருக்க முடியாது என்பதையே இது போன்ற பிரச்சனைகள் கண்முன் நிறுத்துகின்றன. எனவே மனித ஆற்றல் எந்தச் சூழலிலும் தவிர்க்க முடியாதது என்பதே நிதர்சனம் என்பதை மறுப்பதற்கில்லை.
















