இதயம் மற்றும் நுரையீரல் நோய்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வசதியாக, சிறிய அளவிலான AI-ஆல் இயங்கும் கருவியைக் கண்டுபிடித்ததற்காகக் கொல்கத்தாவைச் சேர்ந்த 25 வயதான துனிர் சாஹூ என்ற மாணவர் 2025ம் ஆண்டுக்கான ஜேம்ஸ் டைசன் விருதை வென்றுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜேம்ஸ் டைசன் விருது என்பது பொறியியல் வடிவமைப்புமூலம் நிஜ வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்க்கும் புதுமையான மாணவர் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுவதற்கும், நிதியளிப்பதற்கும் சர்வதேச போட்டியாகும். இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் தங்களுக்கெனத் தனி முத்திரையை ஏற்படுத்த இந்த விருது ஒரு சிறந்த வாய்ப்பாகும். வாழ்க்கையை உண்மையிலேயே மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதை ஊக்கப் படுத்துவதே இந்த விருதின் நோக்கமாகும்.
இவ்விருதுக்கான போட்டியில் சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு, சுமார் 30 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்த ஆண்டுக்கான முதல் பரிசைக் கொல்கத்தாவை சேர்ந்த துனிர் சாஹூ என்ற மாணவர் வென்றுள்ளார்.
1999ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் பிறந்த (Tunir Sahoo) துனிர் சாஹூ கரக்பூரில், Sacred Heart உயர்நிலைப் பள்ளியில் படித்தபின், டாக்டர் பி.சி. ராய் மருந்தியல் கல்லூரியில் B-Pharmacy பட்டம் பெற்றுள்ளார். பிறகு, IIM காஷிபூரில் MBA பட்டம் பெற்ற (Tunir Sahoo) துனிர் சாஹூவின் தந்தை ஒரு வங்கியிலும் தாய் வரலாற்று ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு தொழில் முனைவராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் (Tunir Sahoo) துனிர் சாஹூவின் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருந்தோ ஒரு அறிவியல் ஆய்வகத்தில் இருந்தோ உருவாகவில்லை. மாறாக இந்தியாவின் கிராமப் புறத்தில் இருந்து உருவாகி யுள்ளது. பீகாரின் கிராமம் ஒன்றில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் தனக்கு இந்தக் கண்டுபிடிப்புக்கான எண்ணம் வந்ததாகத் துனிர் சாஹூ கூறியுள்ளார்.
ஒரு தந்தை தனது இளம் மகனைப் பிடித்துக் கொண்டு சுவாசிக்க சிரமப்படுவதைக் கண்டதாகவும், அங்கிருந்த மருத்துவர் நிமோனியாவாக இருக்கலாம் என்றும், ஆனால் அதை உறுதி செய்ய நோயறிதல் கருவிகளும் இல்லை என்றும் கூறியது தன்னை ஆழமாகப் பாதித்ததாகத் துனிர் தெரிவித்துள்ளார். கிராமப் புறங்களில் ஆஸ்துமா, இதய நோய், நிமோனியா போன்ற பல நோய்கள் முற்றிய நிலை வரும் வரை கண்டறியப்படாமலேயே இருக்கின்றன என்றும், அதை மாற்றுவதற்காகவே இந்தத் தொழில்நுட்பக் கருவியைக் கண்டுபிடித்தாகத் துனிர் விளக்கியுள்ளார்.
அது தான் (JivaScope) ஜிவாஸ்கோப்உ இந்த ஆண்டுக்கான ஜேம்ஸ் டைசன் விருதை வென்றுள்ளது. இது AI- யால் இயங்கும் ஒரு சிறிய கருவியாகும். இந்தக் கருவி இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டு நிலைகளை நிமிடங்களில் காட்டுகிறது. ஒரு மருத்துவரோ, மின்சாரமோ, இணைய வசதியோ தேவை இல்லாமல் இந்தக் கருவியைப் பயன்படுத்த முடிகிறது.
டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப்புகள், டெலிமெடிசின் பயன்பாடுகளைப் போலல்லாமல், ஜிவாஸ்கோப் ஆஃப்லைனில் முழுமையாகச் செயல்படுகிறது என்றும், துல்லியமாக நோயறிதலைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றும் ஆஷா தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களும் கிராமப்புற சுகாதார பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
3000 ரூபாய் விலையுடைய ஜிவாஸ்கோப்பின் விலையை 1000 ரூபாயாகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறும் துனிர், அடுத்த 2 ஆண்டுகளில் eSanjeevani உடன் ஒருங்கிணைத்தல், ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெறுதல், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஜிவாஸ்கோப்பை கொண்டு சேர்த்தல் ஆகிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார். உண்மையில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக் கணக்கான கிராமப் புற மக்களின் வாழ்வுக்கான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த JivaScope.
















