ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் 5 இந்திய தொழிலாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆயுதக்குழுக்களின் அட்டகாசத்தால் மாலியில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இந்தியர்கள் கடத்தப்பட காரணம் என்ன என்பதை பற்றித் தற்போது பார்க்கலாம்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தாலும், அங்கு அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களின் கைகள் ஓங்கியுள்ளன. குறிப்பாக அல்குவைதா ஆதரவு பெற்ற ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிம், சுருக்கமாக ஜேஎன்ஐஎம் குழுக்களின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உள்நாட்டில் நிலைமை இப்படியே நீடிப்பதால், பொருளாதார நெருக்கடி அந்நாடு முழுவதும் வியாபித்துள்ளது.
இந்நிலையில், அல்குவைதா ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கோப்ரி அருகே ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 5 பேரைத் துப்பாக்கி முனையில் கடத்தியிருக்கிறது. இது மாலியின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருவதையும், அல்குவைதா போராளிக்குழுக்களின் செல்வாக்கு பெருகி வருவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.. தலைநகர் பமாகோ கிட்டத்தட்ட போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்குப் பாதுகாப்புக்கு என்ன விலை என்ற கேட்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.
கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து அதே நிறுவனத்தின் பிற பகுதிகளில் பணியாற்றிய இந்தியர்கள் அனைவரும் பமாகோவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு எந்த ஆயுதமேந்திய குழுக்களும் பொறுப்பேற்காத நிலையில், கடத்தப்பட்ட தொழிலாளர்கள்பற்றி விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், ஜேஎன்ஐஎம் குழு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவரைக் கடத்தியது. பின்னர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் பிணையாகப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தது. இதே போன்று பணத்திற்காகவே இந்தியர்கள் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. சமீபத்திய ஆண்டுகளில் ஆயுதக்குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு பணத்தை ஈட்டுவதும் மாலியில் வழக்கமான நடைமுறைகளாக மாறிவிட்டதை காட்டுகிறது. அல்ஜீரியாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய மக்ரெப், அன்சார்டைன், அல்-முராபிதுன் மற்றும் மசினா உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஒருங்கிணைந்து 2017ம் ஆண்டு ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிம் என்ற குழுவைத் தோற்றுவித்தது.
இந்தக் குழுக்களின் தலைவர்கள், மாலி மற்றும் வெளிநாட்டுப் படைகளுக்கு எதிரான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், சஹேல் பகுதி முழுவதும் செல்வாக்கை விரிவுபடுத்தவும் தங்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்தனர். கடந்த பத்தாண்டுகளில், JNIM தனது செல்வாக்கை மத்திய மாலி மற்றும் பர்கினா பாசோ மற்றும் நைஜருடன் பகிர்ந்து கொண்ட எல்லைப் பகுதிகளில் சீராக விரிவுபடுத்தியுள்ளது.
இந்தக் குழு தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதற்காகக் கொரில்லாப் போர், படுகொலைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் பேச்சுவார்த்தை என கலவையாகச் செயல்படுகிறது. மாநில கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்துவற்காக, சாலைகள், பள்ளிகள், தகவல் தொடர்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளை இந்தக் குழு தகர்த்தெறிந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியான ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ராணுவ நிர்வாகத்தால் மாலி தற்போது ஆளப்படுகிறது. எனினும் இதையெல்லாம் ஆயுதக்குழுக்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
மாலியின் தலைநகர் பமாகோ ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு தலைநகர் நோக்கி வலுவாக முன்னேறி வருவது மக்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலை என்னவென்று அறிவதற்கான முயற்சிகள் தொடருகின்றன. விரைவில் அவர்களைப் பற்றிய விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















