அமெரிக்கா வேண்டுமென்றே கொரிய பிராந்தியத்தில் அரசியல் மற்றும் ராணுவ பதட்டத்தை அதிகரித்து வருகிறது என வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன், கடந்த 5-ம் தேதி தென்கொரியாவின் பூசான் நகருக்கு வருகை தந்தது.
அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத்தும் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா, கிழக்கு கடற்பகுதியில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்தியது.
இந்நிலையில் பீட் ஹெக்சேத்தின் தென்கொரிய வருகை, வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்கா வெட்கக்கேடான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வடகொரியா கூறியுள்ளது.
மேலும், எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாங்கள் அதிக தாக்குதல் நடவடிக்கையைக் காட்டுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
















