சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைய உள்ள இடத்தைப் பார்வையிட வந்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது..
ஜாகிர் அம்மா பாளையத்தில் 55 சாயப்பட்டறைகளை அமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான அனைத்து பணிகளையும் நிறைவு செய்தது.
இதற்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டமான சாயப்பட்டறைகள் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் திறப்பு விழா நடத்த இருந்த நிலையில், 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போஸ்டர்களை ஒட்டியும், போராட்டங்களையும் நடத்தியும் திறப்பு விழாவைத் தடுத்து நிறுத்தினர்.
சாயப்பட்டறை திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சாயப்பட்டறைகள் திறக்கப்படவுள்ள இடத்தைபார்வையிட, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திருப்பூர் ஈசன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் சென்றனர்.
அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்தி ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், விவசாயிகள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
















