அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், ஒரு மாதத்திற்கும் மேலாக அந்நாட்டில் நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க மக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டிற்கான நிதியை விடுவிக்க முடியும். செப்டம்பர் 30ம் தேதிக்குள் நிதி மசோதா நிறைவேறியவுடன், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு துறைகளுக்குத் தேவையான நிதி சென்றுவிடும்.
ஆனால், இந்தாண்டு நிதி மசோதா தேவையான வாக்குகள் கிடைக்காததால் நிறைவேறாமல் போனது. இருப்பினும், சிறப்புத் தீர்மானம் மூலம், கடந்த ஆண்டின் நிதியையே, அடுத்த ஆண்டிற்கும் ஒதுக்கீடு செய்திருக்க முடியும். ஆனால், அந்தத் தீர்மானமும் செனட் சபையில் நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாகக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. அத்தியாவசியமற்ற பணிகளில் ஈடுபட்டவந்த ஊழியர்கள் 38 நாட்களுக்கும் மேலாகக் கட்டாய விடுப்பில் உள்ளனர். அப்படியென்றால், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களுக்காவது ஊதியம் வழங்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் ஊதியமின்றி தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இன்றைய தேதிக்குச் சுமார் ஆறரை லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாகவும், சுமார் ஏழரை லட்சம் ஊழியர்கள் சம்பளமே இல்லாமல் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஊதியம் வழங்கப்படவில்லை எனில் பணிக்கு வர முடியாது என, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தற்போது தெரிவித்துவிட்டனர்.
இதனால், கடந்த 7ம் தேதி மட்டும் 5 ஆயிரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, நாடு முழுவதும் 4 சதவீத விமான சேவைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை இந்த வாரம் 10 சதவீதமாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த போக்குவரத்துத் துறைச் செயலாளர் Sean Duffy, நிலைமை விரைவில் சீராகாவிட்டால் அமெரிக்கா முழுவதும் விமானங்களின் சேவை மேலும் 20 சதவீதம் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும், உள்ளூர் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் தற்போது ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமை விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையில் சம்பந்தப்பட்ட நாடுகள், தங்கள் பகுதியில் உள்ள ராணுவ தள ஊழியர்களுக்குத் தாங்களாக முன்வந்து ஊதியம் வழங்க முடிவெடுத்துள்ளன.
அமெரிக்காவில் தற்போது மிகவும் அபத்தமான சூழல் நிலவுவதாகவும், அதிகாரிகள் யாரும் உரிய பதிலளிப்பதில்லை எனவும், இத்தாலியில் உள்ள விமான தளத்தின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலோ சக்காரியா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினால் நிலைமை சரியாகும் வாய்ப்புள்ளது. ஆனால், அத்தகைய சமரச பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லை என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். எனவே, அந்தக் கதவும் தற்போது மூடப்பட்டுவிட்டது.
இதனால், அமெரிக்காவின் இந்த நிதி முடக்க நிலை மேலும் பல மாதங்களுக்கு நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுவரை, அத்தியாவசியமற்ற பணியாளர்கள் கட்டாய விடுப்பிலேயே இருக்க வேண்டியதுதான். அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்கள் ஊதியமே இல்லாமல் பணியாற்ற வேண்டியதுதான்.
















