பீகாரில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளைச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டமாக நாளை 122 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. 2-ம் கட்ட தேர்தலில் 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
20 மாவட்டங்களைச் சேர்ந்த 122 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தத் தொகுதிகளில் 3 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் ஒரு கோடியே 95 லட்சம் பேர் ஆண்களும், ஒரு கோடியே 74 லட்சம் பேர் பெண்களும் உள்ளனர் என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் 943 பேர் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















