அமெரிக்க மண்ணை போர் நெருங்காத அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கோல்டன் டோம் பாதுகாப்பு கவச அமைப்பை அமெரிக்கா முழு மூச்சுடன் ஏற்படுத்தி வருகிறது. அதன் வலிமையை சோதிக்கும் தேதியை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், கோல்டன் டோம் பற்றித் தற்போது பார்க்கலாம்.
ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளால், அமெரிக்கா ஒரு பக்கம் மறைமுக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், தங்களது வான்வெளியை எஃகு கோட்டையாக மாற்ற முனைப்பு காட்டி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்… இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கவசமான அயர்ன் டோம், டிரம்பின் கவனத்தை ஈர்த்த நிலையில், அமெரிக்காவை பாதுகாக்க 15 லட்சம் கோடியில் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் டிரம்ப்.
தனது பதவிக்காலம் முடிவதற்குள் கோல்டன் டோம் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு.. அதன்படி கோல்டன் டோம் திட்டம், அமெரிக்க வான்வெளிக்கும் ஊடுருவும் ஏவுகணைகளைக் கண்டறிய, கண்காணிக்க, இடைமறித்து அழிப்பது போன்ற திறன் கொண்ட செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.. கோல்டன் டோம் திட்டத்திற்காக நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வானில் நிலைநிறுத்தவும் அமெரிக்கா முன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் எதிரி ஏவுகணைகளை அமெரிக்காவை நோக்கி ஏவப்படும்போதே அதனை அழிக்கும் திறன் கொண்ட கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பை 2028ம் ஆண்டுக்குள் சோதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனமான Lockheed Martin, space-based missile interceptor-ஐ கொண்டு உண்மையான சோதனையை திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. space-based missile interceptor என்பது கோல்டம் டோம் அமைப்பில் மிகவும் ஆபத்தான, தீர்க்கமான முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது.
இது எதிரி ஏவுகணை ஏவப்பட்ட சில நொடிகளில் விண்வெளியில் வெளிப்பட்டு அழிக்கக் கூடிய ஒரு அமைப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது… ‘The War Zone, இதழில் வெளியான அறிக்கையின்படி, லாக்ஹீட் மார்ட்டின், வெர்ஜினியாவில் உள்ள மையத்தில் கோல்டம் டோம் அமைப்புக்கான கட்டளை மறறும் கட்டுப்பாட்டு அமைப்புக்கான முன்மாதிரி சூழல் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த முழுத் திட்டம் குறித்து பென்டகன் மௌனம் காத்து வந்தாலும், கோல்டன் டோம் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய பாதுகாப்பு அமைப்பாகவும், பல தசாப்தங்களுக்கு அமெரிக்காவின் விண்வெளி மற்றும் ராணுவ சக்தியின் மையமாகவும் மாறும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர். விண்வெளி தற்போது புதிய போர்க்களமாக மாறியுள்ளது என்பதையோ கோல்டன் டோம் திட்டத்தின் வீச்சு காட்டுகிறது.
2028 ஆம் ஆண்டில் கோல்டன் டோம் அமைப்பின் ஏவுகணைகள் விண்வெளியில் செயலில் இறங்கும்பட்சத்தில், முழு உலகமும் அதன் எல்லைக்குள் இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது.. லாக்ஹீட் மார்டினின் திட்டம் வெற்றி பெற்றால், S-400 அல்லது அயர்ன் டோம் போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான தேவை இருக்காது என்றும் கூறப்படுகிறது. கோல்டம் டோம் திட்டம் முழுவதுமாகச் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அமெரிக்காவை தரை முதல் விண்வெளி வரை வெல்ல முடியாத ஆற்றலை அழிக்கும் என்பதில் ஐயமில்லை.
















