பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் கூறுவது போல் அந்நாட்டின் கனிமத்துறை ட்ரில்லியன் டாலர் அளவுக்கு மதிப்புடையது அல்ல என்று தெரியவந்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அமெரிக்கா- பாகிஸ்தான் உறவு நீடிக்காது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தங்களிடம் உள்ள 6 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான அரிய வகை கனிமங்கள் மற்றும் கனிம வளங்களை உலகளாவிய முதலீட்டுக்காகத் திறக்கப்போவதாகக பாகிஸ்தான் கூறி வருகிறது. இதில் அமெரிக்கா, சீனா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாகாணங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற கனிம முதலீட்டு மாநாட்டில், அமெரிக்கா, சீனா மற்றும் சவுதி அரேபியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.
உலகளாவிய முதலீட்டாளர்களுக்காக, அனைத்து நடைமுறைகளையும் ஒரே இடத்தில் முடிக்கும் வகையில் one-window முறையைக் கொண்டுவரவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்குச் சென்ற ராணுவத் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் பாகிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்ட அரிய வகை கனிமங்கள் அடங்கிய மரப்பெட்டியை ட்ரம்புக்குப் பரிசளித்தார்.
மிக முக்கியமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான Rare Earth Minerals என அழைக்கப்படும் antimony, copper concentrate, neodymium, praseodymium உள்ளிட்ட கனிமங்களைக் கொண்ட முதல் கப்பலை அமெரிக்காவுக்குப் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. இது உலகளாவிய முக்கிய கனிமங்கள் விநியோக சங்கிலியில் பாகிஸ்தானின் இடத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் US Strategic Metals (USSM) நிறுவனம் பாகிஸ்தான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி இருந்தது. மேலும் 500 மில்லியன் டாலர் முதலீட்டுடன் கனிமங்கள் சுத்திகரிப்பு மற்றும் மேம்பாட்டு மையங்களை அந்நாட்டில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் பயன்படுத்தப்படாத கனிம வளத்தின் மதிப்பு 6 ட்ரில்லியன் டாலர் என்று பல ஆண்டுகளாகவே, பாகிஸ்தான் கூறி வருகிறது.
இது NI 43-101 தரநிலை போன்ற எந்தவித சர்வதேச சான்றளிக்கப்பட்ட தரவையும் அடிப்படையாகக் கொண்டதல்ல என்று கூறப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS மினரல்ஸ் இயர்புக் படி, பாகிஸ்தானின் கனிம மற்றும் குவாரித் தொழில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெறும் 6.5 பில்லியன் டாலராக இருந்தது என்றும், அந்நாட்டின் கனிம ஏற்றுமதி 1 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது என்றும் எடுத்துக் காட்டுகிறது.
இதுமட்டும் இல்லாமல், பாகிஸ்தானின் பயன்படுத்தப் படாத கனிம இருப்புகளின் மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கனிம இருப்புக்களை பிரித்தெடுப்பதற்கான எந்தவித தொழில்நுட்ப ஆய்வுகளும் இன்னும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, 2020 ஆம் ஆண்டுக்கான USGS இயர்புக்கில் பாகிஸ்தானில் அரிய மண் உற்பத்தி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சொந்த புவியியல் ஆய்விலும் தார் நிலக்கரி வயலில் இருந்து அரிய மண் கனிமங்களை ஆராய்வது பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது.
கைபர் பக்துன்க்வா போன்ற பகுதிகளில் லேசான அரிய மண் கனிமங்கள் இருந்தாலும், அவற்றின் அளவு மற்றும் தரம் இன்னும் மதிப்பிடப் படவில்லை. பாகிஸ்தானின் மொத்த அரிய மண் கனிமங்கள் இருப்புக்கள் வெறும் 400,000 டன்கள் என்றுதான் கூறப்படுகிறது. இந்தியாவின் 7 மில்லியன் டன் அரிய மண் கனிமங்கள் மற்றும் அமெரிக்காவின் 2 மில்லியன் உள்நாட்டு இருப்புகளுடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய அளவே பாகிஸ்தானில் உள்ளது.
202ம் ஆண்டில் வெறும் 66 மெட்ரிக் டன்கள் ஆண்டிமனி மட்டுமே பாகிஸ்தான் உற்பத்தி செய்தது. கடந்த மார்ச் மாதம் புதிய பெரிய அளவிலான ஆண்டிமனி படிமம் கண்டுபிடித்ததாக அறிவித்தது. எனினும், அவற்றின் அளவு, தரம் மற்றும் மதிப்பு சரிபார்க்கப் படாத நிலையில், நம்பகமான புவியியல் வரைபடத் தரவுகள் எதையும் பாகிஸ்தான் இன்னும் வெளியிடவில்லை. நியோடைமியம் மற்றும் பிரசோடைமியம் கொண்ட அரிய மண் கனிமங்களைக் கப்பலில் அமெரிக்காவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
உண்மையில் பல தாதுக்களில் நியோடைமியம் மற்றும் பிரசோடைமியம் ஆகியவை இயற்கையாகக் காணப்படும். எனவே, பாகிஸ்தான் தனியாக இந்தக் கனிமங்களைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்யவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பாகிஸ்தானிடம் அந்த அளவுக்கு மதிப்புடைய கனிமங்கள் இல்லை என்றும், மற்ற நாடுகளில் விலை மலிவாகக் கிடைக்கும் கனிமங்களைப் பாகிஸ்தானிடம் அதிக விலைக்கு அமெரிக்கா வாங்குவது புத்திசாலித்தனமான முடிவல்ல என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
















