மருத்துவர்கள் போர்வையில் நாட்டில் மிகப்பெரிய உயிரிழப்புகளைஏற்படுத்தத் திட்டமிட்டட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுபற்றியய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் 27ம் தேதி, ஸ்ரீநகரில் ராணுவ படையினருக்கு உள்ளூர் மக்கள் எந்த ஒத்துழைப்பும் அளிக்கக் கூடாது என ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ச்சியாக, ஒன்பது நாட்களுக்குப் பிறகு, கடந்த நவம்பர் 6ம் தேதி, உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள அம்பாலா சாலையில் உள்ள மருத்துவமனையிலிருந்து தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் அடில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அனந்த்நாக் மருத்துவமனையில் நடத்திய சோதனையில், டாக்டர் அடிலின் லாக்கரில் AK-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, 350 கிலோ அம்மோனியம் நைட்ரேட், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் வெடிபொருட்களுடன் டைமர்களையும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை குழு கைப்பற்றியுள்ளன. மேலும் விசாரணையில் ஃபரிதாபாத்தில் (Muzammil) முஸ்ஸாமில் என்ற டாக்டரிடம் ஏராளமான வெடிபொருட்கள், வெடிகுண்டுகளுடன் இணைக்கப்பட்ட டைமர்கள் மற்றும் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஃபரிதாபாத்தில் அல்-ஃபாலா மருத்துவமனையில் பணியாற்றி வந்த புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் Muzammil முஸ்ஸாமில் கைது செய்யப் பட்டுள்ளார். அவரிடமிருந்த அனைத்து ஆபத்தான பொருட்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. இந்நிலையில், அதலாஜ் டோல் பிளாசா அருகே எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் தெலுங்கானாவைச் சேர்ந்த டாக்டர் அகமது மொஹியுதீன் சையத் மற்றும் முகமது சுஹேல் மற்றும் ஆசாத் ஆகியோரையும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இரண்டு பயங்கரவாதிகளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது. இதன் மூலம், ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டம் முறியடிக்கப் பட்டுள்ளது. உலகின் மிகவும் கொடிய biological poisons வகைகளில் ஒன்றான (ricin) ரிசினைப் பயன்படுத்தி இந்தியாவில் பொது மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது. அதற்காக, டெல்லி, அகமதாபாத் மற்றும் லக்னோவில் பொதுமக்கள் அதிகம் வந்துபோகும் மிகவும் நெரிசலான பொது இடங்களைக் குறிவைத்து உளவு பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
முக்கிய குற்றவாளியான டாக்டர் அகமது மொஹியுதீன் சையத் சீனாவில் பயிற்சி பெற்ற பட்டதாரி எனவும், மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பான The Islamic State – Khorasan Province அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் சையத் தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, ஆமணக்கு விதைகளில் இருந்து ricin என்னும் ரிசின் நச்சுப் பொருளைப் பிரித்தெடுத்து, அதைப் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்துக் கோயில்கள் மற்றும் மற்றும் நெரிசலான பொது இடங்களில் உணவு அல்லது குடிநீரில் கலந்து கொடுத்து படுகொலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து, 2 க்ளாக் பிஸ்டல்கள்,1 பெரெட்டா பிஸ்டல், 30 தோட்டாக்கள் மற்றும் ரிசின் பதப்படுத்துதலுக்கான 4 லிட்டர் ஆமணக்கு எண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களை மத்திய தடயவியல் ஆய்வகங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இந்தியாவில் முழுமையான பயங்கரவாத நெட்வொர்க்கை உருவாக்கப் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ரகசிய தகவல் தொடர்புகள், வங்கி பரிமாற்றங்கள் மற்றும் அவர்கள் எங்கெங்கு சென்று யார் யாரை சந்தித்தனர் என்ற விவரங்களையும் புலனாய்வுத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சரியான நேரத்தில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதால், ஐஎஸ்ஐஎஸ்யின் திட்டமிட்ட ஒரு பெரிய பயங்கரவாத சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
















