தமிழ்ஜனம் செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கே டி சி நகர் மங்கம்மாள் சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நான்காண்டுகள் பல்வேறுகட்ட போராட்டம் நடத்தியும் எட்ட முடியாத தீர்வை ஒரு செய்தியின் மூலம் பெற்றுத் தந்த தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றி பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலையின் அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக அமைந்திருக்கிறது. குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையின் அவலநிலை குறித்தும், அதில் நாள்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் தமிழ்ஜனம் தொலைக்காட்சி விரிவான செய்தித் தொகுப்பு தயார் செய்து ஒளிபரப்பியது.
தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தியின் மூலம் மங்கம்மாள் சாலையைப் புதுப்பிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயணிக்கவே அச்சப்படும் அளவிற்கான மேடு பள்ளங்களுடன் கூடிய இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடி வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் பயனளிக்காத நிலையில், விரிவான செய்தி வெளியிட்டுத் தங்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்குப் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழ்ஜனம் தொலைக்காட்சியின் செய்தியை அடிப்படையாக வைத்து, மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் தற்போது சாலையைச் சீரமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















