தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக ஆலங்குளம் அருகே மின்சார தயாரிக்கும் திட்டத்திற்காக வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்களுக்குப் பதிலாக 47 ஆயிரத்து 500 பழம் தரும் மரங்களை நட வேண்டும் எனத் தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மாறாந்தை கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விசி கிரீன் எனர்ஜி நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டது. தனியார் நிலம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் வருவதால், இங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வெட்டப்பட்ட மரங்கள் எதுவும் பாதுகாப்பு ஆணையம் பட்டியலிடப்பட்ட மரங்கள் அல்ல என்றும், மரங்களை அகற்றுவதற்கு ஆணையத்தின் அனுமதி தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனியார் நிலத்தில் மொத்தமாக 4 ஆயிரத்து 750 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக, 10 மரம் வீதம் 47 ஆயிரத்து 500 பழம் தரும் மரக்கன்றுகளை தனியார் நிறுவனம் நட வேண்டும் என உத்தரவிட்டனர்.
இயற்கையை மீட்டெடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமையும் எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இதுதொடர்பாகச் செய்தி வெளியிட்ட தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
















