டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பல குடும்பங்களின் ஆணிவேரை அடியோடு சாய்துள்ளது. பேருந்து நடத்துநர், ஊபர் ஓட்டுநர், கடைக்காரர், வியாபாரி என வாழ்வாதாரமாக இருந்தவர்களை இழந்த உறவினர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தலைநகர் டெல்லியை சோகத்தீயில் தள்ளியிருக்கிறது. கார் வெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் உருக்குலைந்த நிலையில், சிதறிக் கிடந்த கோர காட்சிகளை பார்க்கவே முடியவில்லை. அடையாளம் தெரியாத அளவுக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடந்த உடல்கள் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.. இதில் அடையாளம் காணப்பட்ட உடல்கள் ஒவ்வொன்றாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
தொழிலதிபர் அமர் கட்டாரி என்பவரது கைகளில் ‘Mom my first love’, ‘Dad my strength’, ‘Kriti’ என்ற டாட்டூ இருந்த நிலையில், அதை வைத்தே அவரது உடலை அடையாளம் காண முடிந்ததாக கண்கலங்குகிறார் அவரது தந்தை. அன்றிரவு மகனுடன் இரவு உணவுக்கு செல்லவிருந்ததாக கூறும் அவர், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதாக கூறும்போது கண்களில் கண்ணீர் ததும்புகிறது.. உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் நோமன் அன்சாரியம் அவரது உறவினர் அமனும், தொழிலுக்கு தேவையான அழகு சாதனப் பொருட்கள் வாங்கச் சென்றபோது இந்த துயர சம்பவத்தில் சிக்கினர்.
இதில் நிகழ்விடத்திலேயே நௌமன் உயிரிழந்த நிலையில், அமன் படுகாயங்களுடன் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நௌமனை இழந்த அவரது குடும்பம் தற்போது வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. இதேபோன்று உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் அசோக்குமார் பலியானார். 34 வயதான அசோக்குமார் தனது இரண்டு குழந்தைகளை மட்டுமல்ல, தனது சகோதரனின் மூன்று குழந்தைகளையும் கவனித்த வந்த நிலையில், அவரது இழப்பு, குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்க்க வந்த 52 வயது உர வியாபாரி லோகேஷ் அகர்வால், தனது நண்பரான அசோக்கை சந்திக்க விரும்பினார். இதற்காக லால் கிலா மெட்ரோ நிலையம் வந்த நேரத்தில் கார் வெடிப்பு நிகழ, அவரது உயிர் அங்கேயே பிரிந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஊபர் ஓட்டுநரான 22 வயது பங்கஜ் சாஹினியின் உடலும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக ஊபர் டாக்ஸி ஓட்டி வரும் பங்கஜ் சாஹினி, கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கியதால் அவரது தலையின் பின்புறம் சிதறிப்போனதாக அவரது உறவினர் கண்கலங்கினார்.
டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள கடையில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்த தினேஷ் சர்மா, கார் வெடிப்பில் பலத்த காயங்களுடன் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு குழந்தைகளுடன் அவரது குடும்பம் தவியாய் தவித்த நிலையில்,இறுதியாக அவரது உயிரற்ற உடலையே காண முடிந்ததாக உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். செங்கோட்டையில் உள்ள கௌரி சங்கர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 28 வயதுடைய அங்குஷ் சர்மா மற்றும் 20 வயதுடைய ராகுல் கௌஷிக் ஆகியோர் நேரடியாக இந்த கார் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளனர்.
கார் வெடித்தபோது பறந்து வந்த பாகம் ஒன்று, அங்குஷைத் தாக்கியது. இதன் விளைவாக அங்குஷ் சர்மாவின் முகம் மற்றும் உடலில் 80 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டன. ராகுல் படுகாயம் அடைந்திருந்தாலும், தீக்காயங்களால் உயிருக்குப் போராடிய அங்குஷை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த லோக் நாயக் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மருத்துவமனைக்கு வெளியே, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒன்றுகூடி, காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிய காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. கார் வெடிப்பில் ஒரு குடும்பத்தின் ஆணி வேராக இருந்தவர்கள் பலியானதை, அவர்களது குடும்பத்தினரை துயரத்தில் தள்ளியிருப்பதுடன், வாழ்வாதாரத்தை தேடி அலையும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
















