H1B விசா கட்டணத்தை உயர்த்தி ஒட்டுமொத்த இந்திய ஐடி ஊழியர்களையும் கதிகலங்க செய்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டில் U-TURN அடித்துள்ளார். என்ன காரணம்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது தான் H1B விசா. தொழில்நுட்பம், மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கான ஊழியர்களுக்கு இந்த விசா மூலம் அமெரிக்காவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவர் H1B விசாவை பெற்றால், அடுத்த 3 ஆண்டுகள்வரை அவர் அமெரிக்காவில் பணியாற்ற முடியும். இந்த H1B விசா மூலம் இந்தியர்கள்தான் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.
அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றனர். இந்தச் சூழலில்தான், கடந்த செப்டம்பர் மாதம் H1B விசாவின் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது. அமெரிக்காவில் பணியாற்றும் மற்றும் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் இது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
காரணம், ஒரு லட்சம் டாலர் என்பது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாய். அதற்பு முன்புவரை அதிகபட்சமாக 5 ஆயிரம் டாலர் என்ற அளவில்தான் H1B விசாக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அமெரிக்க மக்களுக்குப் பணியில் முன்னுரிமை வழங்கும்பொருட்டு இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ட்ரம்ப் விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு திறமைவாய்ந்த ஊழியர்கள் கிடைக்காமல் செய்துவிடும் என அப்போது பலரும் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால், அந்த வாதங்கள் எதையும் வழக்கம்போல் ட்ரம்ப் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால், அமெரிக்க தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடி தற்போது டிரம்பிற்கு உண்மை நிலவரத்தைப் புரிய வைத்துள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி சார்பில் ட்ரம்ப்பிடம் நேர்காணல் எடுக்கப்பட்டது. அப்போது, H-1B விசா மீதான கட்டுப்பாடு தங்களது நிர்வாகத்திற்கு பயனுள்ளதாக இருக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதலளித்த ட்ரம்ப், வெளிநாடுகளில் உள்ள திறமை வாய்ந்த ஊழியர்களை நாம் நமது நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் எனத் தெரிவித்தார். அதுதான் ஏற்கனவே அமெரிக்காவில் ஏராளமான திறமைசாலிகள் இருக்கிறார்களே என செய்தியாளர் பதிலுக்கு கேள்வி எழுப்பினார். அந்தக் கூற்றை உடனடியாக மறுத்த ட்ரம்ப், இல்லை இல்லை அமெரிக்காவில் சில திறமைசாலிகள் இல்லாமல் உள்ளதாகக் கூறினார்.
அமெரிக்காவில் வேலையில்லாமல் உள்ள மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களை ஏவுகணை தயாரிக்கும் பணிக்கு அனுப்பிவிட முடியாது எனவும் ட்ரம்ப் பதிலளித்தார். “அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் பேட்டரிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேட்டரிகளை தயாரிப்பது என்பது மிகவும் சிரமமான பணி என்பது அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் வெடிவிபத்துகள் கூட நேரிடும். அந்த மக்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என விரும்பவில்லை. நீங்கள் அவர்கள் வெளியேற வேண்டும் என நினைக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
எப்போதும் நாம் திறமையானவர்களை தக்கவைத்துகொள்ள வேண்டும்.” எனவும் ட்ரம்ப் அப்போது தெரிவித்தார். ட்ரம்பின் இந்தக் கருத்து, வெளிநாட்டு ஊழியர்கள் விவகாரத்தில் அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தை உணர்த்துவதாகப் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக H1B விசா தொடர்பான கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது. வருங்காலத்தில் விசா கட்டணத்தை அவர் குறைக்கவும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















