டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை உகாசா என்பவர் துருக்கியிலிருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது.
கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் உமர் நபி தான் என்பது, ஐ 20 காரில் சேகரிக்கப்பட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக டெல்லி மசூதிக்குச் சென்றது மற்றும் கன்னோட் பேலஸ் பகுதி வழியாக ஐ20 காரில் சென்றது போன்ற சிசிடிவி காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டெல்லி தாக்குதலை உகாசா என்ற குறியீட்டு பெயரை கொண்ட நபர் துருக்கியில் இருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது.
துருக்கி சென்று வந்த பின்னரே உமர் நபியும் தாக்குதலை அரங்கேற்றியுள்ளார். இந்த தாக்குதலைப் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி டிசம்பர் 6-ம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதியின் அறையில் சிக்கிய டைரியில் 25 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகளின் 2-வது காரான சிவப்பு நிற ECOSPORT ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3வது காரான SUZUKI BREZZAவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், கார் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு உதவவும் அமெரிக்கா முன்வந்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் உதவியை ஏற்பது குறித்து இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.
















