இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இணைந்துள்ளதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, துருக்கி இன்னொரு பாகிஸ்தானாகப் பார்க்கப்படுவதற்கு என்ன காரணம் ? பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்.
எப்போதும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட துருக்கி, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துகளை முன்வைத்தது. ஆனால் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் அளவுக்கா செயல்படும்? என்ற சந்தேக பார்வை, டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு மேலோங்கி உள்ளது. செங்கோட்டை அருகே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதும், அனைவரின் சந்தேகமும் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.
இந்திய புலனாய்வு அமைப்புகளும் அந்த அடிப்படையில் தான் விசாரணையை முடுக்கி விட்டன. ஆனால் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் உமர் முகமது, முஸம்மில் ஷகில் ஆகியோரின் பின்னணியை ஆராயும்போது, அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதாவது, துருக்கி தலைநகர் அங்காராவில், டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது கண்டறியப்பட்டுள்ளது. உமர் முகமது மற்றும் முஸம்மில் ஷகில் ஆகியோரின் பாஸ்போர்டை ஆய்வு செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரும் துருக்கி சென்று வந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.
அங்காராவில் உகாசா எனும் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதியுடன் மருத்துவர்கள் இருவரும் சந்திப்பு நடத்தியதை கண்டறிந்துள்ள அதிகாரிகள், துருக்கி பயணத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட டெலிகிராம் குரூப் மூலம் இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். துருக்கி பயணத்திற்கு பிறகு மருத்துவர்கள் இருவரும் ஃபரிதாபாத் மற்றும் சகரான்பூர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்கான ஆதாரங்களையும் என்ஐஏ அதிகாரிகள் திரட்டியுள்ளனர். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக, உமர் முகமது செல்பொனுக்கு துருக்கியில் இருந்து அழைப்புகள் வந்ததா? என்ற கோணத்திலும் விசாரணையை அதிகாரிகள் தீவிரபடுத்தியுள்ளனர்.
ஒரு புறம் சரியான ஆதாரங்களைத் திரட்ட இந்திய அதிகாரிகள் மும்முரமாகக் களமிறங்கி இருந்தாலும், துருக்கி இந்தச் செயலைச் செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதற்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் முக்கிய காரணமாக இருக்கிறார். ஏனென்றால் காஷ்மீர் விவகாரத்தில், உண்மையின் பக்கம் நிற்காமல் பாகிஸ்தான் துணை நிற்கும் எர்டோகன், ஜநா போன்ற சர்வதேச அமைப்புகளில் தேவையின்றி இந்தியாவுக்கு எதிராகப் பேசி வருகிறார். அதுமட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதி கொடுத்தது யார் என்றால் எர்டோகன் தான்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் நிலைநிறுத்தியிருக்கும் பெரும்பாலான தடவாளங்கள் துருக்கி வழங்கியது தான். இப்படி அனைத்து வழியிலும் துருக்கிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ள நிலையில், டெல்லி தாக்குதல் சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என எர்டோகன் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவின் சந்தேகப் பார்வை அடிப்படை ஆதாரமற்றது எனவும் கூறியுள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை மறைக்க எர்டோகன் அரசு தவறிவிட்டது. டெல்லியில் நிகழ்ந்ததை கார் வெடிப்புச் சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ள துருக்கி தூதரகம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்ததை மட்டும் பயங்கரவாத தாக்குதல் எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த இரட்டை வேடத்தால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் வழியில் துருக்கியும் இணைந்துள்ளதோ என்ற சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது.
















