சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை காலை 10 மணியளவில் பிரதமர் மோடி பார்வையிடுவார்.
இது நாட்டின் அதிவேக ரயில் இணைப்புக்கான மிகவும் லட்சியமிக்க உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.
மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் சுமார் 508 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும். இது குஜராத் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலியில் 352 கி.மீ தூரத்துக்கும்,மகாராஷ்டிராவில் 156 கி.மீ. தூரத்துக்கும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடம் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, போய்சர், விரார், தானே, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும், இது இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
சுமார் 47 கிமீ நீளமுள்ள சூரத்-பிலிமோரா பிரிவில், கட்டுமானப் பணிகள் மற்றும் தண்டவாளப் பாதை அமைத்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. சூரத் நிலையத்தின் வடிவமைப்பு, நகரத்தின் உலகப் புகழ்பெற்ற வைரத் தொழிலைப் பிரதிபலிக்கிறது. பயணிகளின் வசதியை மையமாகக் கொண்டு இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான காத்திருப்பு ஓய்வறைகள், மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இதில் உள்ளன. இது சூரத் மெட்ரோ, நகரப் பேருந்துகள் மற்றும் இந்திய ரயில்வே கட்டமைப்புடன் தடையற்ற பல-மாதிரி போக்குவரத்து இணைப்பையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
















