நாடு முழுவதும் 32 கார் குண்டு வெடிப்புகளை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன. அந்த வகையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் மறைத்து நிறுத்தப்பட்டிருந்த மாருதி பிரெஸ்ஸா காரை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
டெல்லி செங்கோட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், நாசகார வேலையில் ஈடுபட்ட ஒருவரையும் விட்டு விடாமல் வேட்டையாடப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து, 10 பேர் அடங்கிய என்ஐஏ அதிகாரிகள் குழு, விசாரணையைத் தீவிரப்படுத்தி, மருத்துவர் என்ற போர்வையில் சதிவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கைது செய்து வருகின்றனர்.
மிகப்பெரும் தாக்குதல் சம்பவத்தை நடத்த முடியாத விரக்தியில், டெல்லியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில், 13 உறவுகளை இழக்க நேர்ந்தாலும், அடுத்தடுத்த சதித்திட்டங்கள் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளன. அதன்படி, தீவிரவாத தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் என்ஐஏ வசம் சிக்கி வருகின்றன. டெல்லி தாக்குதலுக்காக ஐ20 காரை உமர் நபி பயன்படுத்திய நிலையில், அவரது பெயரிலேயே பதியப்பட்ட FORD ECOSPORT காரை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கண்டுபிடித்தனர்.
தற்போது அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் டவர் 17 அருகே மறைத்து நிறுத்தப்பட்டிருந்த மாருதி பிரெஸ்ஸா காரையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மருத்துவர் முஸம்மில் ஷகீலின் அறையில் கிடைத்த டைரியில் கார்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், கார்களை மறைத்து வைக்க உதவிய வாசித் என்ற நபரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் என்ஐஏ அதிகாரிகள்.
ஃபரிதாபாத் அருகே உள்ள தவுஜ் கிராமத்தில், மெக்கானிக் ஷாப் நடத்தி வரும் வாசித்திடம் இருந்து பல விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 9-ம் தேதி 3,000 கிலோ வெடிமருந்துகளை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், அது தொடர்பாகவும் விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது.
நூ மாவட்டத்தில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் வாங்கியது உறுதிசெய்யப்பட்ட நிலையில், கடை உரிமையாளரான தினேஷ் குமார் என்ற நபரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வெடிமருந்து விற்பனையின் போது ஏன்? எதற்கென்று விவரங்கள் கேட்காமல், அவர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் நிலையில், 13 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
















