பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, டெபாசிட் இழந்திருப்பது கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மூன்று ஆண்டுகள் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர், பீகாரில் வேரூன்றியிருந்த சாதி, அரசியலுக்கு மாற்றான முழக்கத்தோடு, ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கியிருந்தார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலில், 238 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தில் குதித்தார் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், பிரசாந்த் கிஷோர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணிக்குப் போட்டியாகத் தேர்தலில் தனித்து களமிறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிமீது தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட இவரது கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தனர்.
அதன்படியே பீகார் முழுவதும் அவர் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்…. மூன்றாயிரம் கிலோ மீட்டர் பேரணி நடத்திய பிரசாந்த் கிஷோருக்கு, செல்லும் இடமெல்லாம் கூட்டமும் கூடியது… இதனால், அவை வாக்குகளாக மாறும் என்றே எண்ணியிருந்தார் பிரசாந்த் கிஷோர்… ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது அவரது எண்ணமெல்லாம் தவிடுபொடியானது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட அவருக்கு மூன்று நான்கு இடங்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது… ஆனால் களத்தில் ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் பட்சத்தில், அரசியலில் இருந்தே விலகுவோன் என்று சவால் விடுத்திருத்திருந்தார் பிரசாந்த் கிஷோர்… தற்போது அவரது சவாலே, அவரது கட்சியின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது… பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை நிதிஷ்குமார் முடித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஜன் சுராஜ் கட்சி மற்றக் கட்சிகளைப் போன்று வலுவான பூத் அமைப்பை உருவாக்காதது தேர்தலில் பிரதிபலித்தது… பிரசாந்த் கிஷோரை தவிர, கட்சியில் வலிமையான தலைவர்கள் இல்லாததும், விரைவான அணுகுமுறை இல்லாததும் பின்னடைவை ஏற்படுத்தியது.. தேர்தல் அறிக்கை, யாருடன் கூட்டணி போன்ற கேள்விகளுக்கு அவரது கட்சியினரிடம் விடை இல்லாமல் இருந்ததும், பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடாததும் பெரும் பின்னடைவாக அமைந்தது.
பிரசாந்த் கிஷோரின் பிரச்சாரம் வளர்ச்சி சார்ந்து இருந்தபோதும், பீகாரின் தேர்தல் களம், அடையாளம் போன்றவை சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதில் கவனம் செலுத்தாதது தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
















