தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வினை சுமார் நான்கரை லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, டெட் தேர்வில் இடை நிலை ஆசிரியர்களுக்கு இன்று வினாத்தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை 2ஆம் வினாத்தாள் தேர்வும் நடைபெறுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ்நாடு முழுவதும் உள்ள 367 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை ஆயிரத்து 241 மையங்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 தேர்வர்களும் எழுதுகின்றனர். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சென்னையில் 23 தேர்வு மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற வினாத்தாள் 1 தேர்வினை 23 மையங்களில் ஆறாயிரத்து 56 பேர் எழுதினர். ராயப்பேட்டை பீட்டர் சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 220 பேர் தேர்வை எழுதினர்.
இதனை ஒட்டி, தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை நடைபெறும் வினாத்தாள் 2 தேர்விற்காக சென்னையில் 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 22 ஆயிரத்து 932 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
நெல்லையில் 11 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் 1 தேர்வை 69 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் மூன்றாயிரத்து 550 பேர் எழுதினர். தேர்வை ஒட்டி, தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















