சென்னை வளசரவாக்கத்தில் பழைய மழைநீர் கால்வாயின் மீது தரமற்ற முறையில் கான்கிரீட் மூடியை அமைத்துக் கால்வாய் கட்டியதாக மாநகராட்சி அதிகாரிகள் கணக்கு காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வளசரவாக்கம் 11-வது மண்டத்திற்கு உட்பட்ட சின்னப் போரூர், பஜனை கோயில் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதிய கால்வாய் அமைக்காமல் ஏற்கனவே உள்ள கால்வாயின் மேற்பகுதிகளை இடித்து அகற்றி விட்டு அதன் மீது தரமற்ற முறையில் இரும்பு கம்பிகளை வைத்துக் கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், புதிய கால்வாய் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவில்லை என்றும், கான்கிரீட் மூடி அமைக்கத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அலட்சியமாகப் பதில் அளிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், மழைநீர் செல்வதற்கு சிறிய அளவிலான குழாய் வைத்திருப்பதால், குடியிருப்புகளை மழைநீர் சூழும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
















